Chennai corporation: EV சார்ஜ் காலியா? கவலை வேண்டாம், இனி ஒவ்வொரு ஏரியாவிலும் பொது ஸ்டேஷன் - சென்னை மாநாகராட்சி
Chennai corporation charging stations: மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள், சென்னையின் ஒவ்வொரு மண்டலத்திலும் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Chennai corporation charging stations: மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள், சென்னையின் ஒவ்வொரு மண்டலத்திலும் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு - மின்சார வாகன பயன்பாடு:
காற்று மாசுபாடு, எரிபொருள் செலவு, தொழில்நுட்ப வசதிகள் என பல்வேறு காரணங்களால், மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் மின்சார வாகனங்களின் பயன்பாடு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு லட்சத்து 73 ஆயிரம் மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மின்சார வாகன விற்பனை தொடர்பான தரவுகளின்படி, தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 482 மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. அதில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 762 இருசக்கர வாகனங்களும், 7 ஆயிரத்து 770 கார்களும், ஆயிரத்து 14 லாரி உள்ளிட்ட மின்சார வாகனங்களும் விற்பனையாகியுள்ளன.
சென்னையில் மின்சார வாகன கலாச்சாரம்:
தமிழ்நாட்டில் விற்பனையானதாக கூறப்படும் மின்சார வாகனங்களில், கணிசமானவை தலைநகர் சென்னையில் தான் பயன்பாட்டில் உள்ளன. போக்குவரத்து நெரிசல், குறுகலான சாலைகள் மற்றும் அதிகப்படியான பயன்பாடு போன்ற காரணங்களால், நகரவாசிகள் மின்சார வாகனங்களை அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மின்சார வாகன பயன்பாடு அதிகரிப்பதை உணர்ந்துள்ள சென்னை மாநகராட்சி, ஒவ்வொரு மண்டலத்திலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது.
சென்னையில் பொது சார்ஜிங் நிலையங்கள்:
மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்காக, ஒவ்வொரு மண்டலத்திலும் இடத்தை தேர்வு செய்யும் பணிகளை மாநாகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. மின்சார வாகனங்களில் பயணிக்கும் மக்களிடையே, குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கு முன்பே சார்ஜிங் தீர்ந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. அதனை போக்கும் வகையில் தான், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக நிறுவனம், சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் முடிவை எடுத்துள்ளது.
நிலம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரம்:
இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் வடசென்னை பகுதியில் சரியான இடத்தை தேர்வு செய்து, சார்ஜிங் நிலையங்களை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தென்சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளுடன் ஒப்பிடும்போது, தங்கள் பகுதியில் பார்க்கிங் பகுதிகள் குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு, சார்ஜிங் நிலையங்களுக்கான இடத்தை தேர்வு செய்ய வடசென்னை மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுதொடர்பாக பேசும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனீஷ் சேகர், “நிலங்களை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. மொத்தமாக அமைய உள்ள சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை விரைவில் இறுதி செய்யப்படும். வாகனங்களின் ரேஞ்ச் தொடர்பான பயனாளர்களின் அச்சம் ஒரு பிரச்னையாக உள்ளது. அதனை போக்கும் விதமாக மாநகர் முழுவதும் தேவையான எண்ணிக்கையிலான நிலையங்கள் அமைக்கப்படும். அதற்கான நிலங்களை தேர்வு செய்து வழங்கும்படி சென்னை மாநகராட்சியிடம் கோரியுள்ளோம்” என தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சேர்ந்து செயல்பட தனியார் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என கூறப்படுகிறது.
பொதுமக்கள் கோரிக்கையும், மாநகராட்சி பதிலும்:
எழும்பூர் மற்றும் புதுப்பேட்டை பகுதிகளில் பொது சார்ஜிங் நிலையங்களை அமைக்க, மக்கள் கோருவதாக, மாநகராட்சி கவுன்சிலர் ஃபாதிமா முசாஃபெர் தெரிவித்துள்ளார். இதனிடையே சார்ஜிங் நிலையங்களுக்காக தற்போது உள்ள பார்க்கிங் இடங்களை அணுகக் கூடாது, பசுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நிலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் தற்போது உள்ள 89 பார்க்கிங் இடங்களில் பெரும்பாலனவற்றில் தான், சார்ஜிங் நிலையங்கள் அமைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேசியுள்ள மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், “குடியிருப்பாளர்களுடன் கலந்தாலோசித்து, அனைத்து மண்டலங்களிலும், மின்சார வாகனங்களுக்கான பொது சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கான நிலத்தை அடையாளம் காண, TNGEC உடன் இணைந்து மாநகராட்சி நிர்வாகம் செயல்படும்” என்று உறுதியளித்துள்ளார்.