Railway New Rules: டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலால் 18 பேர் உயிரிழந்த நிலையில், புதிய விதிகளை ரயில்வே நிர்வாகம் வகுத்துள்ளது.

Continues below advertisement

ரயில் போக்குவரத்து:

நாட்டின் தினசரி ரயில் போக்குவரத்தில் ரயில்வே மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புறநகர் ரயில் சேவை தொடங்கி, தெற்கே கன்னியாகுமரியில் இருந்து, வடக்கே டெல்லி வரை இணைப்பதில் ரயில் சேவை முதன்மையானதாக விளங்குகிறது. தினசரி கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ரயில்வேயில், அண்மைக்காலமாகவே அடுத்தடுத்து விபத்துகளும் அரங்கேறி வருகின்றன. பல சர்ச்சைகளும் சூழ்ந்து வருகின்றன. அதற்கு உதாரணமாக தான், கடந்த மாதம் டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலாகும். அந்த கோர சம்பவத்தில் 18 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர். 

Continues below advertisement

பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை: 

விபத்துகள் மட்டுமின்றி ரயிலில் பயணிக்கும் பெண்களிடம் அத்துமீறல், நகை பறிப்பு, தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. எனவே, ரயில் பயணிகளின் பாதுகப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் தான், ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க,  மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. அதன் முடிவில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

60 ரயில் நிலையங்களில் புதிய கட்டுப்பாடுகள்:

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, நாடு முழுவதும் உள்ள 60 ரயில் நிலையங்களில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் (Confirmed Tickets) உள்ள பயணிகளுக்கு மட்டுமே நடைமேடை அணுகலை (Platform access) வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அந்த பட்டியலில் சென்னை சென்ட்ரல், பெங்களூரு சிட்டி, ஹவுரா சந்திப்பு, சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் புது தில்லி ரயில் நிலையங்கள் உள்ளிட்டவை அடங்கும் என கூறப்படுகிறது. பெருநகரங்களில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளதால், அங்கு கட்டாயம் இந்த விதிகள் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. அதன்படி, சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலும் கூட்ட நெரிசல் கணிசமாக குறையும் என நம்பப்படுகிறது. ஆனந்த் விஹார், வாரணாசி, அயோத்தி மற்றும் பாட்னா உள்ளிட்ட பல நிலையங்களில் இந்த திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய நடைமுறை என்ன?

ரயில்வே நிர்வாகத்தின் புதிய விதிகள் அமலுக்கு வந்தவுடன், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளும், டிக்கெட் இல்லாதவர்களும் குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு வெளியே குறிப்பிட்ட பகுதிகளில் காத்திருக்க வேண்டியிருக்கும். ரயில்கள் வரும்போது மட்டுமே பயணிகள் நடைமேடைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பெரிய ரயில் நிலையங்களில் வார் ரூம்கள் அமைக்கப்படும். கண்காணிக்க இந்த நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். இந்த நடவடிக்கைகளுடன், நிலையத்தின் திறன் மற்றும் ரயில்களின் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து டிக்கெட் விற்பனையின் எண்ணிக்கையிலும் கட்டுப்பாடு இருக்கும்.

அமலுக்கு வரவுள்ள மற்ற நடவடிக்கைகள் என்ன?

  • 1) ரயில்வே ஊழியர்கள் மற்றும் சேவைப் பணியாளர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்
  • அவசர காலங்களில் உதவி பெற ரயில்வே ஊழியர்களுக்கு எளிதில் அடையாளம் காணக்கூடிய சீருடைகள் விநியோகிக்கப்படும்
  • பிளாட்பாரங்கள் மற்றும் நிலையங்களுக்கு அங்கீகரிக்கப்படாத நுழைவு வாசல்கள் சீல் வைக்கப்படும்
  • 12 மீட்டர் (40 அடி) அகலம் மற்றும் 6 மீட்டர் (20 அடி) அகலம் கொண்ட இரண்டு புதிய நடைபாதை மேம்பால வடிவமைப்புகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்
  • இந்த நிலையங்களில் மூத்த அதிகாரிகள் நிலைய இயக்குநர்களாக நியமிக்கப்படுவார்கள், அவர்கள் இடத்திலேயே முடிவுகளை எடுக்கவும் நிதி சார்ந்த விஷயங்களைக் கையாளவும் அதிகாரம் கொண்டவர்களாக இருப்பார்கள்
  • நிகழ்நேர ஒருங்கிணைப்புக்காக புதிய தலைமுறை டிஜிட்டல் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்படும்