சென்னையில் 4 கடற்கரைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. பட்டினப்பாக்கம் கடற்கரை, காசிமேடு துறைமுகம், நீலாங்கரை கடற்கரை மற்றும் திருவொற்றியூர் கடற்கரைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. கடற்கரைகளை எட்டுவதற்காக காவல்துறை சார்பில் பிரத்யேகமாக 17 வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், 18 ஆயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னையில் மொத்தம் ஆயிரத்து 519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், சிலைகளை கரைக்க வருபவர்கள் அமைதியான முறையில் ஊர்வலத்தில் வரலாம் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பாதுகாப்பு ஏற்பாடு


விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் கொண்டாடப் படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு திவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது. முக்கியமான ஊர்வலங்களில் கண்காணிப்பு பணிக்காக ட்ரோன்கள் மற்றும் Mobile CCTV கேமராக்கள் உபயோகப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விதிமுறைகளின் விவரம்



  • களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

  •  

  • நிறுவப்பட் சிலைகள் தண்ணீரில் கரையக்கூடிய இயற்கையான களிமண்ணால் மட்டும் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.

  • சிலையின் உயரம் பீடம் உட்பட 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • சிலைகளானது வேற்று மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகில் நிறுவப்பட கூடாது. 

  • விழா அமைப்பாளர்கள் எளிதில் தீப்பற்றகூடிய பொருட்களை கொண்டு பந்தல் அமைப்பதை தவிர்த்திடல் வேண்டும்.

  • விழா அமைப்பினைச் சேர்ந்த இருவர் 24x7 சிலைப்பாதுகாப்பில் ஈடுபட வேண்டும்.

  • சிலைக் கரைப்பு ஊர்வலமானது அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாகவும் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மூலமாக மட்டுமே எடுத்துச்செல்லப்பட வேண்டும்.

  • விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் ஊர்வல வழித்தடங்கள் மற்றும் சிலைக் கரைப்பு இடங்களில் பாட்டசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

  • விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களின் போது மத துவேச கோஷங்களை எக்காரணத்தை முன்னிட்டும் எழுப்பக் கூடாது.

  • ஒலிப்பெருக்கிகள் காலை 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது.

  •  விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். 



விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களின் போது பொது மக்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமலும் அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற அமைப்பாளர்களும் பொதுமக்களும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.