சென்னையில் நான் வசிக்கும் பகுதியில் புதன்கிழமையைத் தவிர ஒரு தூய்மைப் பணியாளர் அண்ணா காலையில் குப்பைகளைச் சேகரிக்க வருகிறார். அவர் பார்ப்பதற்கு ஒரு தேவதையைப் போல இருப்பார். அவ்வப்போது இரவு நீண்ட நேரம் கண் விழிக்கும்போது ரோந்து பணிகளில் காவல் துறை நண்பர்கள் வருகிறார்கள், அவர்கள் பார்ப்பதற்கு கடவுள் போல இருக்கிறார்கள். எனக்கு இப்போதும் நியாபகம் இருக்கிறது, 30 வயது மதிக்கத்தக்க ஒரு அக்கா தினமும் வந்து கதவைத் தட்டி, உடம்பு சுடுதா? ஜொரம் அடிக்குதா? தடுப்பூசி போட்டீங்களா? என கேட்டுக் கொண்டே இருபார். அந்த அக்கா பார்க்க தேவதையை போல இருப்பார். எனது நண்பனுக்கு உடல்நிலை சரி இல்லை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன், நண்பனை பரிசோதித்த மருத்துவர் பார்ப்பதற்கு கடவுள் போல இருந்தார். எனக்கு கடவுளாக, தேவதைகளாக தெரிந்தவர்களுக்கு, இந்த அரசாங்கம் வைத்த பெயர் முன்களப்பணியாளர்கள். அதுவும் இந்த கொரோனா காலகட்டத்தில் இவர்கள் இப்படி அறிமுகப்படுத்தப்பட்டார்கள். ஆனால், இதற்கு முன்னரும் இதே பணியை இவர்கள் செய்து கொண்டு இருந்தார்கள். அப்போதும், இப்போதும் அவர்கள் இதே பணியைத் தான் செய்து கொண்டு இருக்கிறார்கள்.  


ஆனால் இவர்களில் நாம் யாரை மிகவும் கண்ணியத்துடன், மரியாதையுடன் நடத்தியிருக்கிறோம்..? மருத்துவரையும் காவலர்களையும் தவிர, இவர்களில் வேறு யாரையும் இந்த சமூகம் ’சக மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும்’ என மதித்ததுண்டா? உடனே நான் மதிக்கிறேன் எனச் சொல்லி தப்பிக்க நினைகாதீர்கள். சமூகம் என்பது நீங்களும் தானே தவிர நீங்கள் மட்டும் இல்லை எனப்தை புரிந்து கொள்ள வேண்டும். யாரோ செய்வதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும் என அடுத்ததாக உங்கள் ஆறாம் அறிவு கேள்வியை எழுப்பலாம், ஆனால் கொரோனா எங்கோ மூலையில் இருக்கும் சீனாவின் ஒரு பெரும் நகரத்தில் உருவானது. ஆனால், இங்கு நமக்கு நோய் தொற்று ஏற்பட்டு விடாமல ராப்பகலாக கண் விழித்து தொற்று பாதிப்பு யாருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது, என பணியாற்றிய முன் களப்பணியாளர்கள், யாரோ செய்ததற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் என எந்த கேள்வியும் கேட்கவில்லை. அவர்களுக்கு அரசே முன் வந்து, இன்சுரன்ஸ், நிவாரண நிதி என பலவற்றை அறிவித்தாலும், அவர்கள் அந்த பணத்திற்காகாவா முன் களப்பணியாளர்களாக பணியாற்றி இருப்பார்கள்? இல்லவே இல்லை எனபது தான் என்னுடைய பதில். அவர்களுக்கும் நம்மைப் போல் குடும்பம் இருக்கிறது. ஆனால், அவர்கள் தன்னுடைய குடும்ப உறவுகளை எல்லாம் தன் மனதின் அடி வரிசையில் வைத்து விட்டு, நமக்காக முன் வரிசையில் பணியாற்றி வருகிறார்கள்.


நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல், ஒரு வாரம் ஊரடங்கு என அரசு அறிவித்தபோது, சென்னையில் இருந்த பலரும் தனது சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு நடத்தினார்கள். முன் களப்பணியாளர்களும் அந்த படையெடுப்பில் அணி வகுத்து இருக்க முடியும், ஆனால் கொரோனாவை எதிர்த்து போராடி நம்மை காத்தவர்கள் இவர்கள். கடவுள்கள், தேவதைகள்.


இந்த கடவுள்களும் தேவதைகளும் திடீரென் வானத்தில் இருந்தா குதித்து வந்தார்கள்? அவர்கள் எப்போதும் நம்மிடையே தான் இருக்கிறார்கள். ஆனால் இவர்களைப் பற்றி நாம் பெரிதும் கவனத்தில் கொண்டதில்லை. காரணம் நாம் நம் அன்றாடத்தில் தொல்லைகள் இயங்க இவர்களின் மன்றாட்டங்கள் தெரிவதில்லை. ஆனால் கொரோனா எனும் பெருந்தொற்று இவர்கள் இங்குதான் இருக்கிறார்கள், இவர்கள் மிகவும் முக்கியமானவர்கள் எனச் சொல்லிக் கொடுத்ததோடு, இவர்களு மனிதர்கள் என பொட்டில் அடித்திருக்கிறது.


தமிழ்நாட்டின் பெரிய சமத்துவபுரம் என்றால் அது, சென்னை என மார்தட்டிக்கொண்டு நாம் இருக்கிறோம். இந்த சமகாலத்தில்தான், கொரோனா காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் இப்போதும் தனது பணிகளைச் செய்யத் தேவைப்படும்  முறையான உபகரணங்கள் கூட இல்லாமல் தனது உடலையே கழிவு சுத்தம் செய்யும் கருவியாக மாற்றிக் கொண்டவர்கள் தூய்மைப் பணியாளர்கள். முன் களப்பணியில் யாரேனும் இறந்துவிட்டால் 50 லட்சம், 25 லட்சம் என மாறி மாறி அறிவித்த சமத்துவ புர அரசுகள், இவர்களைக் காக்க மெத்தனம் காட்டுவது ஏன் என்பதற்கு பதில் பெரிய கலகத்தில் முடியும். கல(ழ)கத்தில் பிறப்பது தானே நீதி.


மேற்சொன்ன படி சென்னையில் இருந்து அணிவகுப்பு நடத்திய குழுவில் நானும் ஒருவன். தமிழகத்தின் முதல் கொரோனா ஹாட் ஸ்பாட் என அறியப்பட்ட பெருந்துறை சேனிடோரியத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உணவு அளிக்கும் பணி செய்ய சுகாதாரத்துறையால் பலரும் நியமிக்கப்பட்டார்கள். அங்கு பணி செய்ய எனது உறவுக்கார நண்பன் தனபால் சென்றார். ஆனால் அவர் பணிக்குச் சேர்ந்த தினமே இருவர் அடுத்தடுத்து தொற்று பாதிப்பால் உயிரிழந்து போனார்கள். இதனால் பெரிதும் அச்சபட்ட நண்பர், வீட்டுக்கு திரும்பிவிட்டார். ஆனால், தனது கனவுகளையும் நிகழ்காலத்தையும் மனதில் சுமந்து கொண்டு, தனது மொபைலில் கொரோனா நோயாளிக்குத் தான் உணவு டெலிவரி செய்யப்போகிறோம் எனத் தெரிந்துமே உணவு டெலிவரி செய்தவர்களும் முன் களப்பணியாளர்கள் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர்கள்.  உணவுப் பொருட்களை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு மார்க்கெட்களுக்கு கொண்டு வந்த லாரி ஓட்டுநர்களும் முன் களப்பணியாளர்கள்தான். ஆனால் இவர்களை நாம் இன்னமும் கொண்டாடியதில்லை, வாழ்த்தியதில்லை,  இவர்களை சக மனிதனாக நாம் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். வசூல்ராஜா வைத்தியமான கட்டிப்பிடி வைத்தியத்தினை கொண்டு முன் களப்பணியாளர்களை அனைத்திடுவோமாக.