சென்னை நங்கநல்லூரில் பிரபல திரையரங்கு வரி செலுத்தாததால் அதிகாரிகள் சீல் வைத்தனர்


 


நங்கநல்லூர் பிரபல திரையரங்கம்


 


சென்னை ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சி மண்டலம் - 12 (வார்டு 167 ) நங்கநல்லூர் எம்ஜிஆர் சாலையில் கடந்த 30 ஆண்டுகளாக , வெற்றிவேலன் எனும் காம்ப்ளக்ஸ் இயங்கி வருகிறது. இதில் இரண்டு திரையருங்குகள் மற்றும் 20 கடைகள் இயங்கி வருகிறது. இந்தநிலையில் கடந்த 2018 ஆண்டில் இருந்து தியேட்டரின் உரிமையாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வரி செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் 60 லட்சம் ரூபாய் வரை வரி நிலுவையில் உள்ளது.




 


 திரையரங்கு சீல் 


 


 


 


இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பியும் நேரில் சென்று தெரிவித்த நிலையிலும், வரியை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இதனை அடுத்து இன்று காலை வருவாய் துறை அதிகாரி திருமால் தலைமையில், அதிகாரிகள் தியேட்டருக்கு நேரில் சென்று அங்கு இருக்கக்கூடிய ஆட்களை வெளியேற்றி மின்சாரத்தை துண்டித்து, இரண்டு தியேட்டருக்கும் சீல் வைத்தனர். திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


 


 


தொலைபேசியில் நடந்த உரையாடல்


 


அப்போது வருவாய் துறை அதிகாரியின் அலைபேசியில் தொடர்பு கொண்ட மண்டலம் குழு தலைவர் அதிகாரியிடம் எதற்கு சீல் வைக்க வேண்டாம் எனவும், திரையரங்கு உரிமையாளருக்கு சிறிது காலம் அவர் கால வழங்கப்படும் எனவும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. 




அதற்கு பொருமையாக பதில் அளித்த அதிகாரி திருமால், ' நான் எவ்வளவு கூறியும் திரையருங்கு உரிமையாளர்கள் பதில் அளிக்க வில்லை எனவும், வீட்டிற்கு சென்றால் கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வெளியே அனுப்புகின்றனர் எனவும் கூறினார். மேலும் திரையருங்கு உரிமையாளர்கள் பணத்திற்கான காசோலையை கொடுத்தால், நாங்கள் திரையரங்கிற்கு சீல் வைக்காமல் இப்படியே சென்று விடுகிறோம் எனவும் கூறினார் . மேலும் தனக்கு அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும் , எனவே நடவடிக்கை எடுத்து ஆக வேண்டும் என, எதிர் தரப்பில் ‌ தரப்பில் பேசிய மண்டல குழு தலைவரிடம் தெரிவித்தார். இதன்பிறகு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 


 




திரையரங்கு யாருடையது தெரியுமா ?


 


 


நங்கநல்லூரில் செயல்பட்டு வரும் வெற்றிவேல் மற்றும் வேலன் ஆகிய திரையரங்கு பிரபலமான ஒன்றாக உள்ளது. இந்த திரையரங்கில் நிறுவனராக கண்டோன்மெண்ட் சண்முகம் என்பவர் திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலந்தூர் தொகுதியில் திமுக சார்பில் 1989,1996 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த சண்முகம் கடந்த மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். 


 


 


மாநகராட்சி வரிபாக்கி எவ்வளவு ? 


 


 


 


1972 ஆம் முதல் திரையரங்குகளை சண்முகம் நடத்தி வந்தார், தந்தை மறைவிற்குப் பிறகு அவருடைய மகன் வெற்றிவேல் திரையரங்குகளை நடத்தி வருவதாக தெரிகிறது. திரையரங்குகளை நவீனப்படுத்திய பிறகும், மாநகராட்சிக்கு பழைய வரியை கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இரண்டு திரையரங்குகளின் வரிபாக்கி சுமார் 60 லட்ச ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில், தற்போது சீல் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.