நம் நாட்டில் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவும், கைத்தறி தொழில் நலிவடையாமல் பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும் மத்திய அரசால் 1985-ம் ஆண்டு கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டு 1998 முதல் 11 இரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை அமல்படுத்தும் வகையில் கைத்தறி துறையில் அமலாக்கப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு கைத்தறி ஆணையர், சென்னையில் அமலாக்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
11 வகை இரகங்கள்
கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட குறிப்பிட்ட தொழில்நுட்ப குறிப்பீடுகளுடைய இரகங்களான கரை பாவு பேட்டு டிசைனுடன் கூடிய காட்டன் வேட்டி இரகம், பாவு பேட்டு மற்றும் ஊடை பேட்டு மற்றும் புட்டா டிசைனுடன் கூடிய காட்டன் மற்றும் பட்டு சேலை இரகம், கரை மற்றும் முந்தியுடன் கூடிய காட்டன் துண்டு இரகம், கரை பாவு பேட்டு டிசைன் மற்றும் முந்தியுடன் கூடிய கிரே அங்கவஸ்திரம், லுங்கி, பெட்சீட், ஜமக்காளம், சட்டைதுணிகள், கம்பளி, சால்வை, உல்லன் ட்வீட் மற்றும் சத்தார்க் உள்ளிட்ட 11 வகை இரகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தண்டனைக்குரிய குற்றம்
இந்த இரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டம் 1985 சட்டப்பிரிவு (5)ன்படி சட்டத்தை மீறிய செயலாகும். இது கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டம் பிரிவு 10(ஏ)ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த இரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி/விற்பனை செய்யப்படுகின்றதா என்பதை கண்காணிக்க கைத்தறி ஆணையர் அவர்களால் சரக வாரியாக பறக்கும்படை அமைக்கப்பட்டு, பறக்கும் படை மற்றும் அமலாக்கப்பிரிவு அலுவலர்களால் விசைத்தறி கூடங்களுக்கும், விற்பனை நிலையங்களுக்கும் நேரில் சென்று தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்
ஆய்வின்போது கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர்கள் மீது காவல் துறை மூலம் கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டம் 1985 பிரிவு 10 - இன் கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் அதிகபட்சமாக ஆறுமாத கால சிறை தண்டனையோ அல்லது அதிகபட்சமாக விசைத்தறி ஒன்று ரூ.5000/- வரை (ரூபாய் ஐயாயிரம் மட்டும்) அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக வழங்கப்படும்.
கட்டணமில்லா தொலைபேசி எண்
கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை இரகங்கள் குறித்து விளக்கம் பெறவும், கைத்தறி இரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது குறித்த புகார்களை தெரிவிக்கவும் எண் 824, கே.எஸ்.பார்த்தசாரதி தெரு, காமாட்சியம்மன் காலனி, காஞ்சிபுரம் -2ல் இயங்கி வரும் கைத்தறி துறை துணை இயக்குநர் அலுவலகத்தையும் சென்னை கைத்தறி ஆணையர் அலுவலகத்தில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 7637 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார்கள்.