சென்னைக்கு கவுகாத்தியில் இருந்து வந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த சிறுமி, அவசரகால பட்டனை அழுத்தி, லைஃப் ஜாக்கெட்டை வெளியே எடுத்ததால், விமானத்தில் எச்சரிக்கை மணி ஒலித்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று வந்து கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 147 பயணிகள் பயணித்துக் கொண்டு இருந்தனர். கவுகாத்தியை சேர்ந்த ஹேம்நாத் (61) என்பவர், தனது 8 வயது பேத்தி பிரசித்தா, உட்பட  குடும்பத்தினர் 4 பேருடன், இந்த விமானத்தில் பயணித்துக் கொண்டு இருந்தார்.

 

திடீரென அவசர கால எச்சரிக்கை அலாரம் ஒலித்தது

 

விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானி கேபினில் திடீரென, அவசரகால எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. அதோடு விமானத்துக்குள்ளும் அந்த சைரன் ஒலி கேட்டது.இதனால் விமானத்தில் பெரும் பரப்பு பரபரப்பு ஏற்பட்டது. விமான பணிப்பெண்களும்,விமான ஊழியர்களும் பதற்றத்துடன், விமானத்திற்குள் அங்கும் இங்கும் ஓடி, பயணிகளை கண்காணித்தனர். அப்போது பயணி ஹேம்நாத்தின் பேத்தி பிரசித்தா, அவர் அமர்ந்திருந்த, விமான இருக்கைக்கு கீழே அவசரகால உபயோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த, லைஃப் ஜாக்கெடை  எடுத்து அணிந்து கொண்டிருந்தார்.



 

நான் விளையாட்டாக எடுத்து விட்டேன்

 

இதை அடுத்து விமான பணிப்பெண்கள் அதிர்ச்சி அடைந்து, அந்த சிறுமியை பிடித்து விசாரித்தனர். அந்த சிறுமி பயந்து அழத் தொடங்கினார். சிறுமியின் தாத்தா ஹேம்நாத் (61), சிறுமியை பக்குவமாக விசாரித்த போது, தான் அமர்ந்திருந்த விமான இருக்கை அருகே இருந்த ஒரு பட்டனை அழுத்தினேன். உடனே நான் அமர்ந்திருந்த இருக்கை, மேலே தூக்கியது. அதனுள் இருந்த  இந்த லைஃப் ஜாக்கெட், வெளியே வந்தது. நான் விளையாட்டாக எடுத்து விட்டேன் என்று கூறினார். இதை அடுத்து விமானப் பணிப்பெண்கள், லைஃப் ஜாக்கெட்டை சிறுமியிடம் இருந்து வாங்கி, இருக்கைக்கு அடியில் உள்ள பாதுகாப்பு பகுதியில் வைத்து மூடினர். இதையடுத்து சைரன் ஒலி நின்றது.

 

பட்டனை யாரும் உபயோகப்படுத்த கூடாது

 

விமானத்தில் ஒவ்வொரு இருக்கைக்கும் கீழே, இந்த உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் இருக்கும். அவசர ஆபத்து நேரத்தில் மட்டும், பயணிகள் ஒவ்வொருவரும், அவரவர் சீட்டுகளுக்கு அருகே உள்ள, அந்த பட்டனை அழுத்தி, லைஃப் ஜாக்கெட்டை எடுத்து போட்டுக் கொள்ள வேண்டும். இது தவிர மற்ற நேரங்களில் இந்த பட்டனை யாரும் உபயோகப்படுத்த கூடாது. அதை மீறி  யாராவது உபயோகப்படுத்தினால், இதைப்போல் அபாய சைரன், பைலட் கேபின்  மற்றும் விமானம் முழுவதும் கேட்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது, என்று விமான ஊழியர்கள் கூறினார்.

 

அதோடு அந்த விமானத்தின் தலைமை விமானி, ஹேம்நாத் இடம் விசாரணை மேற்கொண்டார். ஹேம்நாத், குழந்தை தெரியாமல் செய்து விட்டது மன்னித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டார். ஆனால் விமானி மன்னித்து விடுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. நான் முறைப்படி எனது உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவேன், அவர்கள் தான் இது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார். அதன்படி விமானம் சென்னையில் தரையிறங்கியதும், இண்டிகோ ஏர்லைன்ஸ் உயர் அதிகாரிகள், மற்றும் சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர். அதோடு ஹேம்நாத் குடும்பத்தினரை, சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

 

மன்னிப்பு கேட்டார்

 

சென்னை விமான நிலைய போலீசார், விசாரணை நடத்தினர். அப்போதும் ஹேம்நாத் தெரியாமல், 8 வயது குழந்தை விளையாட்டாக  அந்த பட்டனை அழுத்தி விட்டது. அதற்கு அந்தப் பட்டனை அழுத்தினால் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கிறது என்று, எதுவும் தெரியாது. எனவே மன்னித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டார். போலீஸ் விசாரணையிலும், பட்டனை அழுத்தியதில், எந்தவித உள்நோக்கமும் இல்லை என்பது உறுதியானது. இதை அடுத்து ஹேமநாத் குடும்பத்தினரிடம் எழுதி வாங்கிக்கொண்டு, எச்சரித்து விடுவித்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் பத்தாம் தேதி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னையில் இருந்து திருச்சிக்கு பயணித்த விமானத்தில், அவசரகால கதவு திறக்கும் பட்டனை அழுத்தியது பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. அந்த விமானம் புறப்படாமல் தரையில் தான் நின்று கொண்டு இருந்தது. ஆனால் இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது, அவசரகால லைஃப் ஜாக்கெட்டை எடுக்கக்கூடிய, பட்டனை, 8 வயது சிறுமி அழுத்தி, சென்னை விமான நிலையத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.