கடந்த 24 மணி நேரத்தில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு 438 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதன் மூலம் வேலூர் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 40 ,000 ஆக உயர்ந்துள்ளது .
வேலூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சேண்பாக்கத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (44) . இவர் ஆர்கெஸ்ட்ரா எனப்படும் கலை நிகழ்ச்சி குழு ஒன்றை வேலூர் நகரில் நடத்தி வருகின்றார் .
கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட அவர் , சிகிச்சைக்காக வேலூர் ஆற்காடு ரோட்டில் இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது . ஒரு வார சிகிச்சைக்கு பிறகு கொரோனா நோயில் இருந்து குணம் அடைந்த அவர் , டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார் . வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல்நலகுறைவு ஏற்பட்டு மீண்டும் அந்த தனியார் மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டார் . அங்கு அவரை மருத்துவர்கள் தீவிர பரிசோதனை செய்ததில் இவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்து. நோயின் தாக்கம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திருந்ததால் அவரது இடது கண்ணை அறுவை சிகிச்சை மூவம் அகற்றிய நிலையில் திடீரென நேற்று(26.05.2021) இரவு உயிரிழந்துள்ளார்.
கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு வேலூர் மாவட்டத்தில் நிகழும் முதல் உயிரிழப்பு என்பதால் வேலூர் மாவட்ட மக்கள் இடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது .
இது குறித்து அந்த தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவர் ஒருவரை தொடர்பு கொண்ட பொழுது, ‛தற்பொழுது எங்களது மருத்துவமனையில் வேலூர் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்தும் , கர்நாடக , ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து உடல் நல கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளில் 40 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்க பட்டுள்ளனர் என்று கண்டறிய பட்டு உள்ளது . இதில் 5 பேர்கள் மட்டுமே வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் , மீதி உள்ள 35 பேர் வெளி மாவட்டங்களையும் ,வெளி மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். மேலும் பாதிக்க பட்ட 40 பேர்களில் 13 நபர்கள் மட்டுமே கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் . மீதமுள்ள 27 நபர்கள் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கபட்டு தொடர் சிகிச்சையில் இருந்துவரும் நோயாளிகள் என்று தெரிவித்தார் .
கருப்பு பூஞ்சை தொற்று தற்போது தமிழகத்தில் பரவலாக பரவி வரும் நிலையில் ஏற்கனவே சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூரில் தற்போது முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கருப்பு பூஞ்சையை தொடர்ந்து வெள்ளை பூஞ்சை மற்றும் மஞ்சள் பூஞ்சை நோய் தொற்று வரத்துவங்கியுள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.