விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய கிணற்றில் போதிய தண்ணீர் இல்லாத நேரத்திலும் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி அதிக அளவில் மிளகாய் பயிர் செய்து வருகின்றனர்.
இங்கு உற்பத்தியாகும் பச்சை மிளகாய் புதுச்சேரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது பச்சை மிளகாய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இருப்பினும் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்த கொள்முதல் விலையாக ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ7-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை வீழ்ச்சியை ஈடுகட்ட முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் சோகத்தில் இருப்பாதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
திண்டிவனம் சுற்று வட்டார கிராமங்களான எண்டியூர், ஆவனிப்பூர், ஒலக்கூர், குருவம்மா பேட்டை போன்ற பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டுள்ளனர். கடந்த வருடம் ஊரடங்கு காலத்திலும் ஏப்ரல், மே மாதங்களில் பச்சை மிளகாய் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை நடைபெற்ற நிலையில், இந்த வருடம் ஓரளவுக்கு விலை கிடைக்கும் என நினைத்து ஏராளமான விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, பச்சை மிளகாய்க்கு உரிய விலை இல்லாமல் கிலோ ரூ.7 முதல் ரூ.10 என்ற விலையில் விவசாயிகளிடம் இருந்து வாங்கி சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களுக்கு ஏற்றுமதி நடைபெறுகிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- ஊரடங்கு உத்தரவு ஆரம்பித்த சமயத்தில் தான் பச்சை மிளகாய் சீசன் ஆகும். ஆனால் தற்போது பச்சை மிளகாய் கிலோ ரூ.3 முதல் ரூ.4 என்ற விலையிலேயே விற்பனை நடைபெறுகிறது. மேலும் ஊரடங்கு காரணமாக பச்சைமிளகாய் வாங்குவதற்கு யாரும் வருவதில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் நொந்து போன விவசாயிகள் நிறைய பேர் பச்சை மிளகாயை பறிக்காமல் செடிகளில் விட்டுவிட்டனர். இதனால் பச்சை மிளகாய் பழுத்து செடிகளிலேயே நாசமாகி விட்டது. இதில் மிஞ்சியுள்ள ஒருசில விவசாயிகள் தான் மிளகாய் செடிகளை பராமரிப்பு செய்து, பச்சை மிளகாய்களை பறித்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட நிலையிலும் பச்சை மிளகாய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றும், இந்த வருடம் பச்சை மிளகாய் பயிரிட்டிருந்த அனைத்து விவசாயிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.
மேலும் விவசாயிகள் தங்களது பச்சைமிளகாயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது ஏற்பட்ட விலை வீழ்ச்சியால் வாழ்வாதாரம் நடத்துவதற்கு மிகவும் கடினமாக இருப்பதாகவும் பச்சை மிளகாய் விவசாயத்தில் செலுத்திய தொகையை மீண்டும் அதனை பெறுவதற்கான வழி இல்லாததால் கடன் சுமையில் விழுந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.