சென்னை கோயம்பேட்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வசிக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பின் அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருகம்பாக்கம் கெங்கையம்மன் கோயில் தெருவில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சூட்டிங் செட் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கண்டறியபட்டுள்ளது. பொது மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
கெங்கையம்மன் கோயில் தெருவில் உள்ள சூட்டிங் பொருட்கள் தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. அதில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. அப்பகுதியை கரும்புகை சூழ்ந்தது. குடோனில் படப்பிடிப்பிற்கு பயன்படுத்தக் கூடிய பொம்மைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிந்ததாக சொல்லப்படுகிறது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அசோக் நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு,மதுரவாயல் ஆகிய பகுதிகளின் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 5 தீயணைப்பு வாகனங்கள் குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டதாகவும் தீயணைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.