காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலக அறையில்  திடீர் தீ விபத்து ஏற்ப்பட்டது, காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

 

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை

 

காஞ்சிபுரம் (Kanchipuram): காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலக அறையில்  இன்று காலையில் ஆட்கள் யாரும் பணியில் இல்லாத நிலையில் மின் கசிவு காரணமாக திடீர் என தீ விபத்து  ஏற்பட்டு  அலுவலகம் முழுவதும் புகை மூட்டமாக சூழ்ந்து கொண்டது.



 

புகை மூட்டம் 

 

தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டிருந்தும் புகை மூட்டம் காரணமாக தீயை அணைக்க முடியாமல் போனதால் உடனடியாக காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள் மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்திற்கு இடையே உள்ளே புகுந்து தீயை லாவகமாக அணைத்தனர். தீ விபத்து நடைபெற்ற அறையில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.



 

இருந்தாலும் அறையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கட்டுப்பாட்டு இயந்திரங்கள், மற்றும் தொலைத்தொடர்பு இயந்திரங்கள் என பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் முழுவதும் தீயில் எரிந்து சேதமாகி உள்ளது. பொதுமக்கள் மக்கள் சிகிச்சைக்காக அதிக அளவில் வந்து செல்லக்கூடிய காலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் மருத்துவமனை வளாகத்தில் திடீரென பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட தீ விபத்து குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.