திருப்புகழ் குழு


2021ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் கனமழை கொட்டி தீர்த்தது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தீவரமாக மழை பெய்தது. குறிப்பாக பெருநகர சென்னையில் மட்டும் வெள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டது.  வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது.  இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. சென்னையில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் சரியாக இல்லாததும் வெள்ளத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.  


இப்படி இருக்கும் சூழலில், மழைக்காலத்தில் வெள்ளதால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க சென்னை பெருநகர வெள்ள நீர் மேலாண்மை குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்து உத்தரவிட்டார்.  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன கூடுதல் செயலாளருமான திருப்புகழ் தலைமையில் 14 உறுப்பினர்கள் கொண்டு ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. 


இறுதி அறிக்கை


இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் திருப்புகழ் தலைமையிலான குழு நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இறுதி அறிக்கையை சமர்ப்பித்தனர்.  வெள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து தாக்கல் செய்த இறுதி அறிக்கை பற்றி எடுத்துரைத்தனர்.  இதனை அடுத்து, திருப்புகழ் குழுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது, ”கடந்த மழையின்போது தண்ணீர் தேங்காமல் அரசுக்கு மிகப்பெரிய நல்ல பெயர் கிடைத்தது.


நற்பெயருக்கு முக்கிய காரணங்களில் ஒன்று திருப்புகழ் குழுவின் செயல்பாடுகள் எனவும் அரசு என்று உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. தொடர்ந்து அரசுடன் இது தொடர்பாக எந்த நேரத்திலும் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்ற வேண்டுகோளையும் விடுத்தார். அதனைத் தொடர்ந்து குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் ஸ்டாலின்.


பரிந்துரைகள் என்ன?


திருப்புகழ் தலைமையிலான குழு சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களை உருவாக்க வேண்டும். மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களை பாதுகாக்க பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி உள்ளிட்ட 14 துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட ஒரு அதிகார அமைப்பை உருவாக்க வேண்டும்.  சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் பணிகளை வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்.


போரூர், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், திரு. வி.க.நகர், கொளத்தூர், மாதாவரம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை தொடர் பணிகளாக மேற்கொள்ள வேண்டும்.  மேலும், இறுதி அறிக்கையில் 12 அத்தியாயங்கள் உள்ளன. அதில் 365 பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. ஆலோசனைக் குழு தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்த பிறகு சென்னையில் 11 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 460 நாட்கள் குழு மேற்கொண்ட நடவடிக்கையாலும், அரசு எடுத்த நடவடிக்கையாலும் வடகிழக்கு பருவமழையின் போது சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.