அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியபட்ட வழக்கில், திருச்சியில் தங்கியிருந்து, கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் இரண்டு வார காலத்திற்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இந்நிலையில் திருச்சியில் கையெழுத்திட சென்ற போது அதிமுகவினர் 100ற்கும் மேற்பட்டோர் திரண்டதாகவும், திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கண்டித்து கோஷம் எழுப்பியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ,பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு செய்தல், நோய்த்தொற்று பரப்பும் விதத்தில் ஊறு விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அரவிந்த் சுப்ரமணியன் ஆஜராகி அரசியல் உள் நோக்கத்துடன் வழக்கு பதியபட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

இதையடுத்து மனு தொடர்பாக வழக்கு தொடர்பாக திருச்சி கண்டோண்மண்ட் காவல்துறை பதிலளிக்கவும்,  உதவிஆய்வாளரை வழக்கில் சேர்க்கவும் உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நவம்பர் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

அதுவரை, ஜெயகுமாருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்பான இறுதி அறிக்கையை தாக்கல் செய்யக்கூடாது எனவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.


 

 





மற்றொரு வழக்கு









கஞ்சிக்கோடு - வாளையாறு ரயில் வழித்தடத்தில் ரயில் மோதி இரு பெண் யானைகள் பலியானது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, தெற்கு ரயில்வே பாலக்காடு மண்டல பொது மேலாளருக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

யானைகள் பாதுகாப்பது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

 

அப்போது, கடந்த 14ம் தேதி கஞ்சிக்கோடு - வாளையாறு இடையே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைக் கூட்டத்தின் மீது ரயில் மோதியதில் இரு பெண் யானைகள் பலியாகியுள்ளதாகவும், காயமடைந்த குட்டி யானை காணவில்லை எனவும் தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக தெற்கு ரயில்வே பாலக்காடு மண்டல பொது மேலாளர் நவம்பர் 24 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

 

மேலும், யானைகள் வழித்தடத்தின் வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை குறைக்க உத்தரவிட்டும், அதற்கு சாத்தியமில்லை என பாலக்காடு மண்டல பொறியாளர் அளித்த அறிக்கை என்பது எந்தவிதமான அறிவியல் ஆய்வு அடிப்படையானதல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், யானைகள் வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தைக் குறைத்து விபத்துக்களை தடுப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கும்படியும், இக்குழு ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும்  உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 24ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

 

மற்றொரு வழக்கில், யானைகள் வழித்தடத்தில் உள்ள சாலையில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அலாரங்கள் 24 மணி நேரமும் எச்சரிக்கை வாசகங்களை ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் போது, யானைகளால் கடந்து செல்ல முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த அலாரங்களை  அகற்றி விட்டு, வேகத்தடைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளனர்.

 

அதேபோல, கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் யானைகள் வழித்தடங்களில் அனுமதியின்றி செயல்படும் செங்கற்சூளைகளை மூட உத்தரவிட்ட நீதிபதிகள், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளனர்.