ஃபெஞ்சல் புயல் காரணமாக தலைநகர் சென்னை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், களத்தில் இறங்கியுள்ள தன்னார்வலர்கள், அரசுடன் இணைந்து மழையால் பாதிக்கப்பட்டு மக்களுக்கு உதவி செய்து வருகின்றன.
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
களத்தில் இறங்கிய தன்னார்வலர்கள்:
சென்னையில் பெய்து வரும் இந்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. பல இடங்களில் மரங்கள் வேரொடு சாய்ந்து விழுந்துள்ளது. சென்னையில் இன்று மழையின் தாக்கம் மேலும் தீவிரம் அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், களத்தில் இறங்கியுள்ள தன்னார்வலர்கள், அரசுடன் இணைந்து மழையால் பாதிக்கப்பட்டு மக்களுக்கு உதவி செய்து வருகின்றன. தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ள தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி, "வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணத்தால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் களத்தில் இருந்து மழை நிலவரத்தை உடனுக்குடன் நமக்கு தெரிவித்து வரும் தன்னார்வலர்களிடம் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினோம்.
காலையிலிருந்து அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை தெரிவித்து, மேலும் களத்தில் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கைப் பணிகளை எடுத்துரைத்தோம். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இடையே தன்னார்வலர்களின் கோரிக்கையும் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தோம். தன்னார்வலர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!