வங்கக்கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் வட தமிழகத்தை உலுக்கி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கடந்த சில தினங்களாக மழை விட்டு விட்டுப் பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதலே பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.


மிதக்கும் சென்னை சாலைகள்:


ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு இருந்த நிலையில், புதுச்சேரி வடக்கு திசையில் இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னையில் பல பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடி வருகிறது. கோயம்பேடு, வடபழனி, பாரிமுனை, தி.நகர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், ஐஸ் அவுஸ், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஆலந்தூர், அண்ணாநகர் என சென்னை நகர் முழுவதும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.  


விடாமல் வீசும் சூறைக்காற்று:


இதன் காரணமாக பிரதான சாலைகள் உள்பட பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், தவிர்க்க முடியாத சூழல் காரணமாக வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளியில் செல்பவர்கள் குளம்போல தேங்கிய மழைநீரால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


குறிப்பாக, வடபழனி, தி.நகர் போன்ற மெட்ரோ பணிகள் நடைபெறும்  பகுதிகளில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது மட்டுமின்றி சென்னையில் தரைக்காற்று மணிக்கு 60 கி.மீட்டர் வேகத்தில் வீசி வருவதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது.


ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை மட்டுமின்றி பலத்த சூறைக்காற்றும் வீசும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்ததால் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராட்சத மோட்டார்களும், மரம் அறுக்கும் இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.


ரெட் அலர்ட்:


இதன் காரணமாக, குளம்போல தண்ணீர் தேங்கியுள்ள சாலைகளில் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மரங்கள் சாய்ந்து விழுந்துள்ள பகுதிகளில் மக்கள் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை மழை காரணமாக 6 சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ள சுரங்கப்பாதையில் ராட்சத மோட்டார்கள் தயார் நிலையில் தண்ணீரை அப்புறப்படுத்த வைக்கப்பட்டுள்ளது. 


இன்று மாலை கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வேலூர் , திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரிக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இரவு வரை மழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.