வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஃபெஞ்சல் புயலாக உருவெடுத்தது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.


சென்னையை மிரட்டும் ஃபெஞ்சல் புயல்:


மேலும், ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே இன்று கரையை கடக்கும் ஏற்கனவே வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. புயல் இன்று மாலை கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையில் இன்று அதிகாலை முதலே மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.


கனமழையாக மட்டுமின்றி சென்னை முழுவதும் பலத்த காற்று வீசி வருகிறது. கனமழையுடன் சூறைக்காற்று வீசி வருவதால் பொதுமக்கள் வெளியில் வராமல் வீட்டிலே இருக்கின்றனர். சென்னையின் பல பகுதிகளிலும் இந்த பலத்த காற்று காரணமாக சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகள், பேனர்கள் தூக்கி வீசப்பட்டன.


கடல் சீற்றம்:


தற்போது சென்னையில் இருந்து 140 கி.மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் மையம் கொண்டுள்ளது. சென்னை பட்டினப்பாக்கம், காசிமேடு, மெரினாவில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.


ஃபெஞசல் புயல் காரணமாக தமிழக அரசு ஏற்கனவே பல முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்தாலும் புயல் காரணமாக, சென்னையின் பல இடங்களிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தற்போது புயல் 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக பலத்த சூறைக்காற்று வீசி வருவதாலும், அதனுடன் கனமழையும் பெய்து வருவதாலும் பொதுமக்கள் பெரும்பாலும் வீட்டின் உள்ளேயே முடங்கியுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியில் வராத மக்கள்:


தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பால், மெழுகுவர்த்திகள் போன்றவற்றை தயாராக வாங்கி வைத்துள்ளனர். இன்று காற்று 60 முதல் 90 கி.மீட்டர் வேகத்தில் வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் பலமான காற்று வீசும் என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.


இந்த மாவட்டங்களில் சாயும் நிலையில் இருந்த மரங்கள், அந்த பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், இந்த மாவட்டங்களில் கரையோரம் வசித்து வரும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


தயார் நிலையில் மாநகராட்சி:


தொடர்ந்து கனமழை பெய்து வரும் சூழலில், சென்னை விமான நிலையத்தில் ஓடுதளத்தில் மழைநீர் தேங்கியிருப்பதால் விமானங்கள் தரையிறங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இன்று முழுவதும் மழையின் தாக்கம் இருக்கும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.


சென்னை மாநகராட்சி சார்பில் தண்ணீர்களை உடனடியாக அகற்றும் விதமாக ராட்சத மோட்டார்கள், மரங்கள் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.