வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மதியம் ஃபெஞ்சல்  புயலாக உருவெடுத்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பெய்து வந்த மழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது.

ஃபெஞ்சல் புயல்:


ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை – காரைக்கால் இடையே இந்த புயல் கரையை கடக்க இருப்பதால் தமிழ்நாடு அரசும், பாண்டிச்சேரி அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.


புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என 8 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புயல் கரையை கடக்கும்போது மாமல்லபுரம் பகுதியில் பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து நிறுத்தம்:


இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலைகளில் புயல் கரையை கடக்கும்போது பொதுப் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதேசமயம் மற்ற நேரங்களில் போக்குவரத்து வழக்கம்போல இயங்கும் என்றும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதேசமயம், மழையைப் பொறுத்து தேவைப்பட்டால் போக்குவரத்து சேவை மாற்றப்படுவதற்கும் வாய்ப்புகள் என்றும் மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதேசமயம், மெட்ரோ மற்றும் மின்சார ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


சென்னையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை எடுத்துள்ளது. அதன் முக்கிய அங்கமாக சென்னையில் நாளை அனைத்து பூங்காக்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெரினா கடற்கரை, திருவான்மியூர், பெசன்நகர் கடற்கரையில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைகளில் கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமானங்கள் ரத்து:


புயல் கரையை கடக்கும்நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த 4 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக அண்ணா பல்கலை. தேர்வுகள் உள்ளிட்ட முக்கிய கல்வி நிலையங்களின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  262 அறுவை இயந்திரங்கள் 150க்கும் மேற்பட்ட ராட்சத  மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


இந்த ஃபெஞ்சல் புயல் காரணமாக பாண்டிச்சேரியிலும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். புதுச்சேரி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமின்றி தேவையற்ற காரணத்திற்காக வெளியில் வர வேண்டாம் என்று அந்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.