சென்னை தேனாம்பேட்டை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவரது மனைவி வீட்டு வேலை செய்து வருகிறார். மனைவி வேலைக்கு சென்ற பின், 12 வயது மகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

 

இதேபோல கடந்த 2017ம் ஆண்டு மே 20ம் தேதி மகனை கடைக்கு அனுப்பி விட்டு, மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் தாய், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

புகார் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், தந்தை தலைமறைவாகி விட்டார். கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இதுசம்பந்தமான வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தந்தை மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாயும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



 


















 

தடை செய்யப்பட்ட ஐ எஸ் ஐ எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க  மறுப்பு.

 

ஈரோட்டைச் சேர்ந்த ஆசிப் முஸ்தகீன் என்பவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

 


தடை செய்யப்பட்ட ஐ எஸ் ஐ எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக ஈரோட்டைச் சேர்ந்த ஆசிப் முஸ்தகீன் என்பவரை  போலீசார், கடந்த ஜூலை 26ம் தேதி கைது செய்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனில் இருந்து அவர், அரபி மொழியில் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பை சேர்ந்தவர்களுடன் நடத்திய உரையாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

 

இதையடுத்து அவருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஆசிப் முஸ்தகீன் தாக்கல் செய்த மனுவை, ஈரோடு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

இந்த உத்தரவை எதிர்த்து முஸ்தகீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கடுமையான நிபந்தனைகள் விதித்தும் கூட ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கைது குறித்த தகவலில் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல், பென் டிரைவ், டைரி குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும், மொபைலில் இடம் பெற்றிருந்த அரபி மொழியில் நடந்த உரையாடல்களின் கூகுள் மொழிபெயர்ப்பு தவறானது எனவும், தொடர்புடைய மற்றவர்களை சேர்க்காமல் மனுதாரர் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

 

இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரர் கைது செய்யப்பட்டு, ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட பிறகே பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், அவை குறித்து கைது தகவலில் குறிப்பிடவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது எனவும், வழக்கின் புலன் விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது எனவும் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.