தாஜ் மஹாலாகவே இருந்தாலும் அதை நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டியிருந்தாலும் கூட அதை இடித்துத் தள்ளுவோம் என சென்னை உயர் நீதிமன்றம் ஆவேசமாகக் கூறியுள்ளது.


தஞ்சையைச் சேர்ந்த எஸ்.டி.ஆறுமுகம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், நாகப்பட்டினத்தில் கட்டுப்பட்டுள்ள ரயில்வே சுரங்கப்பாதைகள் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டுப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.கார்த்திகேயன், எனது கட்சிக்காரர் குறிப்பிட்ட சுரங்கப்பாதையைக் கட்ட தென்னக ரயில்வே ஒன்றுக்கும் மேற்பட்ட நீர்நிலைகளை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டது என்று கூறினார். அப்போது, ரயில்வே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.ராம்குமார், கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டது. சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கிறது. இப்போது தடை கோருவதில் முகாந்தரம் இல்லை என்று வாதிட்டார்.


ஆனால், ரயில்வே தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் ரயில்வே அதிகாரிகளும், மாநில அரசும் மூன்று வாரங்களுக்கு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு கூறினர்.
மேலும், மனுதாரர் குறிப்பிட்டுள்ள சுரங்கப்பாதை என்ன மாதிரியான நிலத்தின் கட்டப்பட்டுள்ளது என்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். அத்துடன், ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்தால் அந்தக் கட்டுமானத்தை இடித்துவிட்டு நீர்நிலையை மீண்டும் உயிர்ப்பிக்க என்ன வழி என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.


ரயில்வே, நெடுஞ்சாலைத்துறைக்கு குட்டு..


நெடுஞ்சாலைகள் அமைப்பது அவசியம். ரயில்வே கட்டுமானங்கள் வரவேற்கத்தக்கது. ஆனால், இவற்றையெல்லாம் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டுவதை ஏற்க முடியாது. ஒருவேளை தவிர்க்கவே முடியவில்லை என்றால் தூண் போன்ற கட்டுமானப் பணிகளை மட்டும் அனுமதிக்கலாம். நீர்நிலையின் பெரும்பான்மை பகுதி இதனால் காக்கப்படும்.
சில இடங்களில் காவல்நிலையங்கள் கண்மாய் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாகக் கூட எங்களுக்கு தகவல் வந்துள்ளது. நீதிமன்ற உத்தரவுகள் தொடர்ந்து மீறப்பட்டு நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இது நிறுத்தப்பட வேண்டும். நீர்நிலைகள் மனிதர்களின் மற்ற உயிரினங்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும். 


நகர்ப்பகுதிகளில் பெருமளவில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பல நீர்நிலைகள் முற்றிலுமாக மாயமாகிவிட்டன. சென்னையில் 2015ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பே மிக முக்கியக் காரணம். நீர்நிலை ஆக்கிரமிப்பதில் நெடுஞ்சாலைத் துறையும், ரயில்வேயும் அடிக்கடி நீதிமன்ற உத்தரவுகளை மீறுகின்றன. நீங்கள் தாஜ்மஹாலே கட்டியிருந்தாலும் அது நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டியிருந்தால் அதை இடித்துத் தள்ள உத்தரவிடுவோம்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கவனம் ஈர்த்துள்ளது.