நீண்ட நாட்களுக்கு பிறகு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 45 படுக்கைகள் காலியாக இருக்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் சற்று குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டது. நாளொன்றுக்கு ஆயிரத்து 500 நபர்கள்வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதேபோல் நாளொன்றுக்கு 40 நபர்கள் வரை கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்து வந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்த காரணத்தினால் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்த கொரோனா படுக்கைகள் அனைத்தும் நிரம்பின. இதன் எதிரொலியாக ஆக்சிஜன் அளவு குறைந்து ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். படுக்கைகள் இல்லாமல் இதுவரை நாம் கண்டிராத கொடூரமான காட்சிகள் அரங்கேறின. ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜனை பயன்படுத்தவேண்டிய நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் ஊரடங்கு எதிரொலி மற்றும் நோய்த் தொற்றில் பரவும் வேகம் குறைந்த காரணத்தினால் கடந்த ஒரு வாரமாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. நாளொன்றுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரத்து 500 நபர்கள் வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
அதேபோல் நோய்த்தொற்றால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்த காரணத்தினால், தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை 6951 நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கையும் அடக்கம்.
கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கடந்த ஒரு மாதமாக ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் தவித்துவந்தனர் . இந்நிலையில் நோயால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ள காரணத்தினால் தற்போது காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனையில் படுக்கைகள் காலியாகியுள்ளன.
இதன் காரணமாக காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள மொத்த கொரோனா படுக்கைகளின் எண்ணிக்கை 400. அதில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை 300. தற்போது ஆக்சிஜன் படுக்கைகள் 35 மற்றும் சாதாரண படுக்கைகள் 10 காலியாக உள்ளன. ஒரு மாதத்திற்கு பிறகு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் படுக்கைகள் இன்று தான் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
குறிப்பாக பெருநகராட்சி பகுதியில் உள்ள 51 வார்டுகளில் தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு பகுதிகளாக இருந்த நிலையில் தொற்று குறைந்து காரணத்தினால் தற்போது 20 வார்டுகளில் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு பகுதிகளாக இருந்துவருகிறது. இதே நிலையில் வைரஸ் தொற்றின் வேகமாக குறையும் பட்சத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளும் குறைவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிக பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அரசு சார்பில் வழங்கப்படும் அறிவுரைகளை முறையாக கடைபிடித்தால் வைரஸ் தொற்று பரவும் வேகம் வெகுவாக குறையும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது