எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம் அரசின் நிதிச்சுமையை பல மடங்கு அதிகரிக்க செய்யும் என  க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது

எண்ணூர் அனல்மின் நிலையம்

1*660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த முனைகிறது. இந்த அனல்மின் நிலையம் குறித்து TANGEDCO மற்றும் மத்திய மின்சார ஆணையம் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான் நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் இத்திட்டத்தை தொடர்வதால் தமிழ் நாடு மின்வாரியத்திற்கும், அரசிற்கும், மின் நுகர்வோருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படும் என தெரிய வந்துள்ளது.

கடன் தாக்கம்:

6,398 கோடி மதிப்பீட்டில். (EMP உட்பட), இத்திட்டத்தை செயல்படுத்தினால்  கடன் பங்கு விகிதத்தை 70:30 என வைத்துக்கொண்டால்  குறைந்தபட்சம் 4,479 கோடி கடன் வாங்க வேண்டியுள்ளது. இந்த கடனுக்கு மாநில அரசுதான் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலையான செலவில் ஏற்படும் தாக்கம்:

இத்திட்டம் குறித்தான அதிகாரப்பூர்வ நிதித் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் திட்டத்தின் ஆரம்பகட்ட காலத்தில் மின்வாரியத்தையும், அரசையும், மின் பயனாளர்களையும் ஆண்டுதோரும் 1.100 கோடி செலவு செய்யும் படியான நெருக்கடியான சூழலில் ஆழ்த்தும். முதல் 7 ஆண்டுகளுக்கு மட்டும் இச்செலவுத் தொகையானது 8,488 கோடியாக இருக்கும் எனவும் இந்த நிலையான செலவு ஆலையின் பயன்பாட்டின் அளவைப் பொருட்படுத்தாமல் செலுத்த நேரிடும். உபரி மின்சாரம் இருந்தாலும், புதிய அனல்மின் நிலையத்திலிருந்து உருவாகும் மின்சாரம் குறைவாகவோ அல்லது அனுப்பப்படாமலோ இருந்தாலும், TANGEDCO  இந்த நிலையான செலவுகளைச் செலுத்த வேண்டும். இவை மின் நுகர்வோருக்கு  கட்டண உயர்வாக மாறும் அல்லது மானியத்தை அதிகரிப்பதன்  மூலம் மாநில அரசு அச்சுமையை ஏற்க வேண்டும்.

 

₹ Cr. Year 1 Year 2 Year 3 Year 4 Year 5 Year 6 Year 7 Total (Year 1-7)
Fixed cost 1,287 1,262 1,236 1,212 1,187 1,163 1,140 8,488

மின்சாரத்திற்கான செலவில் ஏற்படும் தாக்கம்:

இப்புதிய அனல்மின் நிலையமானது 75% உற்பத்தித் திறனில் இயங்கும் பட்சத்தில்  மின்சாரத்தின் விலை முதல் ஆண்டில் ₹7.37/kWh ஆக இருக்கும், இதுவே ஏழாவது ஆண்டில் ₹7.73/kWh ஆக உயரும்.  இருப்பினும், 2018 நிதியாண்டில் இருந்து தமிழ்நாட்டில் அனல்மின் நிலையங்களின் உற்பத்தித் திறன் 60% க்கும் குறைவாக உள்ளது. 55%  உற்பத்தித் திறனில் , முதலாம் ஆண்டில் ஆண்டில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ₹8.98/kWh ஆக இருக்கும், 7ஆம் ஆண்டில் ₹9.26/kWh ஆக உயரும்.  85% உற்பத்தித் திறனைப் பூர்த்தி செய்தால், முதலாம் ஆண்டில் மின்சாரத்தின் விலை ₹6.85/kWh ஆக இருக்கும், 7ஆம் ஆண்டில் ₹7.23 ஆக உயரும் எனவும் அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

(/kwh) Year 1 Year 2 Year 3 Year 4 Year 5 Year 6 Year 7
Tariff at 55% PLF 8.98 9.02 9.05 9.10 9.14 9.20 9.26
Tariff at 75% PLF 7.37 7.42 7.47 7.53 7.59 7.66 7.73
Tariff at 85% PLF 6.85 6.90 6.96 7.02 7.09 7.16 7.23

அனல்மின் நிலையத்தின் 25 ஆண்டுகால ஆயுட்காலத்தில் அதன் மின்சார உற்பத்திக்கான சராசரி நிகர செலவானது(Levelised Cost of Energy)  வெவ்வேறு உற்பத்தித் திறனில் கீழ்க்கண்டவாறு அமையவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது

 

  ₹/kwh
LCOE at 55% PLF (Rs/kwh) 9.45
LCOE at 75% PLF (Rs/kwh) 7.90
LCOE at 85% PLF (Rs/kwh) 7.40

பிற லாபகரமான வாய்ப்புகள்:

நல்ல உற்பத்தித் திறனில் அனல்மின் நிலையம் இயங்கி ஒரு யூனிட் மின்சாரம் ₹7.37/kWh க்கு கிடைத்தால் கூட அதுவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விலையை விட அதிகமாகும். இந்த நிலையில் 55% உற்பத்தித் திறனில் இயங்கினால் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ₹9/kWh ஆக இருக்கும். இது மின்கல சேமிப்பு வசதியுடன் கூடிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலை விட இரண்டு மடங்கு அதிக விலையாகும்( தற்போது இந்த வகை மின்சாரம் ரூபாய் 5க்கு கிடைக்கிறது. 2025ஆம் ஆண்டில் மேலும் குறையும். புதுப்பிக்கத்த ஆற்றல் விலை ரூபாய் 3க்கு  குறைவாக கிடைக்கும்).

இப்படி எந்த வகையில் பார்த்தாலும் இந்த அனல்மின் நிலையத்தின் மூலம் பெறப்படும் மின்சாரத்திற்கான விலை அதிகமாகும். JMK Research & Analytics எனும் நிறுவனம் 2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மின்கல சேமிப்புடன் கூடிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விலை ₹4.97 எனவும் 2030ஆம் ஆண்டில் இது ₹3.4 ஆக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. Lawrence Berkeley National Laboratory நிறுவனத்தின் தேசிய அளவிலான ஆய்வு மின்கல சேமிப்புடன் கூடிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விலை 2025ஆம் ஆண்டில் ₹3.3ஆக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

குறைவான விலையில் மின்சாரம் பெறுவதற்கான வழிகள் பலவுள்ள நிலையில் ஏற்கெனவே கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்படைந்த எண்ணூர் பகுதியில் மேலுமொரு அனல்மின் நிலையம் அமைப்பது ஏற்புடையதல்ல. தமிழ்நாடு அரசு மேற்கூறிய விஷயங்களைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என பூவுலகின் அமைப்பின் சுந்தர்ராஜன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.