பரந்தூர் பசுமை விமான நிலையம்


காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம்  அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம்,நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால், தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.




ஓராண்டை கடந்த தொடர் போராட்டம்


இந்நிலையில் 400-வது  நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் ஊர் மைதானத்தில் ஒன்றுகூடி கண்ணில் கருப்புக்கொடி கட்டிக்கொண்டு,கைகளில் கறுப்பு கொடி ஏந்தியும், மெழுகுவர்த்தி ஏற்றி கைகளில் ஏந்தியவாறு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.


போராட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள்



கொடுக்க மாட்டோம், கொடுக்க மாட்டோம்,ஒரு பிடி மண்ணைக் கூட விமான நிலையம் அமைக்க கொடுக்க மாட்டோம். வேண்டாம் வேண்டாம் விமான நிலையம் வேண்டாம், வளர்ச்சி என்ற பெயரை சொல்லி ஏகனாபுரத்தின் மக்களை முட்டாள் ஆக்க பார்க்காதே. ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தால் திருவோடு எங்கள் கையில் ,என கோஷமிட்டனர்




விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், விமான நிலையம் அமைக்க மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி  கண்டன கோஷங்களை எழுப்பி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 400-வது நாளாக நடந்த தொடர் போராட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என
கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டு வேதனையுடன் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கிராம மக்கள் கூறுவது என்ன ?


இது குறித்து கிராமத்தை சேர்ந்த இளைஞர் கவாஸ்கர் கூறியது, டெல்லியில் விவசாயிகள் ஓராண்டு காலம் மட்டுமே போராடினார்கள். ஆனால் எங்கள் கிராம மக்கள் ஓர் ஆண்டை கடந்து போராட்டத்தை தொடர்ந்து வருகிறோம். கிராம மக்களின் வீடுகளை அழித்தும், விவசாய நிலங்களையும் அழித்தும் விமான நிலையம் அமைப்பதற்கான தேவை என்ன இருக்கிறது? மக்கள் தொகை பெருகிவரும் இந்த சூழலில், விவசாய நிலங்களை தான் அதிகரிக்க வேண்டும். தரிசு நிலங்களில் விமான நிலையம் அமைத்துக் கொள்ளட்டும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. எங்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என தெரிவித்தனர்.




நிற்கதியாக நிற்கின்றோம்.



இதுகுறித்து ஜனார்த்தனன் என்பவர் நம்மிடம் பேசுகையில், தலைமுறை தலைமுறையாக நாங்கள் இங்குதான் வசித்து வருகிறோம். இப்பொழுதுதான் எங்கள் தலைமுறை தலை தூக்க துவங்கியிருக்கிறது. குடிசை வீட்டில் இருந்து மாடி வீடு கட்டிக் கொண்டு வருகின்றோம் . இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து , புது வீடு கட்டுபவர்கள் அதை அப்படியே பாதியில் நிறுத்தி வைத்து இருக்கிறார்கள். எங்கள் கிராமத்தில் பெண் கொடுப்பதற்கு கூட அச்சமடைகிறார்கள். இந்த அறிவிப்பு எங்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. எங்கள் பகுதியில் விமான நிலையம் வேண்டாம் என வேதனையுடன் தெரிவிக்கிறார் ஜனார்த்தனன்.