சென்னை பசுமை விமான நிலையம் ( chennai green field airport )
 
சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800- க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும், மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு  ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி ,குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்


 

உண்ணாவிரதப் போராட்டம், கருப்புக்கொடி போராட்டம், சாலை மறியல், தலைமை செயலகத்தை நோக்கி பேரணி,என பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் 453 வது நாளாக இரவு நேரங்களில் ஒன்று கூடி மத்திய மாநில அரசுகளை எதிர்த்து கோஷங்களை எழுப்பி நாள்தோறும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விமான நிலையம் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் நடைபெற்ற ஆறு கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர். இருப்பினும் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மத்திய மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும்

எடுக்கவில்லை.

 

சிறப்பு கிராம சபை கூட்டம்


 

அதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களை கிராம மக்கள் முழுவதுமாக புறக்கணித்து விமான நிலையம் அமைப்பதற்கான தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இரு முறை கிராமசபை கூட்டம் நடைபெறாத காரணத்தால்  இன்று ஏகனாபுரம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அவித்தது. ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அரசு அதிகாரிகளும் வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்ட நிலையில் ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் யாரும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒருமனதாக புறக்கணிப்பு செய்தனர்.



 

ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் அரசு அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்ட கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளாததால் வேறு தேதிக்கு கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என  ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவித்துவிட்டு சென்றார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போராட்ட குழு செயலாளர் சுப்பிரமணியன் : 

 

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்துள்ள கிராம மக்களிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார். மேலும் விமான நிலையம் அமைக்கப்படாது என்ற அறிவிப்பு வரும் வரை கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு தொடர்ந்து நடைபெறும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.