சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைப்பெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவைகள் பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5 வரை குறைந்த அளவில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

குறைக்கப்படும் ரயில் சேவை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் செல்ல தனியாக 10 மற்றும் 11 பிளாட்ஃபார்ம்கள் உள்ளது. தற்போது அங்கு மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் புறநகர் ரயில் 5 மற்றும் 6 ஆம் நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை தினமும் 204 மின்சார ரயில்கள் கடந்து செல்கின்றன, ஆனால் தற்போது நடைப்பெற்று வரும் பணிகளால் அந்த அளவிற்கு ரயில்களை  இயக்கமுடியாது என்பதால் ரயில் சேவைகளை குறைக்க தென்னக ரயில்வே முடிவெடுத்துள்ளது. 

பயணிகளுக்கு பாதிப்பு: 

இதனால் சென்னை கடற்கரை - தாம்பரம் சேவைகளில் மிகக் கடுமையான பாதிப்பு வரலாம். தாம்பரம் - கடற்கரை இடையே இயக்கப்படும் சேவைகள் 47ல் இருந்து 25 ஆகவும், கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் சேவைகள் 47ல் இருந்து 17 ஆகவும் குறைகிறது. அதே போல் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இயக்கபடும் சேவைகள் 37ல் இருந்து 30 ஆகவும் மறுமார்க்கத்தில் 36ல் இருந்து 33 வரை குறைகிறது. 

சிறப்பு ரயில்கள் இயக்கம்: 

பயணிகளில் நலனுக்காக எழும்பூர் மற்றும் தாம்பரம் இடையே சில குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கப்படும் என்று சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் சைலேந்திர சிங் தெரிவித்தார். மேலும் சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே தற்போது இயக்கப்படும் அளவில் ரயில்களை இயக்குவது அல்லது ஷட்டில் ரயில்களை இயக்குவது தொழிநுட்ப ரீதியாக சாத்தியமில்லை என்றார். இந்த சேவை மாற்றங்கள் இந்த வழித்தடத்தில் மட்டுமே இருக்கும் என்றார். 

தாம்பரத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள்: 

இந்த பணிகள் காரணமாக ஏற்கெனவே சென்னையில் இருந்து இயக்கப்படும் முக்கிய எக்ஸ்பிரஸ்கள் ரயில்களான போட் மெயில், சேது எக்ஸ்பிரஸ், கொல்லம், அனந்தபுரி போன்ற விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. 

நவீன மாற்றங்கள்

எழும்பூர் ரயில் நிலையத்தில் தற்போது நவீன மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதால் சில தற்காலிக சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. விமான நிலையங்களில் இருப்பதைப் போல ரயில்கள் நிற்கும் இடத்தின் மேலே பெரிய கூரை அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காகப் பூமிக்கு அடியில் ஆழமான தூண்கள் போடப்பட்டு வருகின்றன. இப்போது மூடப்பட்டுள்ள 10 மற்றும் 11-வது நடைமேடைகள் விரைவில் திறக்கப்பட்டு, ஒரு வாரத்தில் வழக்கம்போலச் செயல்படத் தொடங்கும். எதிர்காலத்தில் பயணிகள் எளிதாக வந்து செல்லப் புதிய மேம்பாலங்கள், எஸ்கலேட்டர்கள் மற்றும் லிஃப்ட் வசதிகள் இங்கு அமைக்கப்பட உள்ளன.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, முக்கிய நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் வைக்கும் பணி கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வருகிறது. ஆனால், எல்லா இடங்களிலும் இதை எப்போது முடிப்பார்கள் என்ற தேதியை அதிகாரிகள் இன்னும் உறுதி செய்யவில்லை. அதேபோல், மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகள் வைக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை. இருப்பினும், மும்பையில் இருப்பது போன்ற வசதிகளை வருங்காலத்தில் இங்கும் கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.