Chennai Metro Rail: விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறால் நீல வழித்தடத்தில் 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். 


சென்னை மெட்ரோ ரயில்:


சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ரோ ரயில் சேவை. நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் நிலவும் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. 


அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் செப்டம்பர்  மாதத்தில் 84.37 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர் என மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது.


தொழில்நுட்ப கோளாறு:


விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில்  நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறால் நீல வழித்தடத்தில் 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.


நீல வழித்தடத்தில் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று காலை 11:20 மணியளவில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் வரை 9 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் ஒரு வழிய பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.


20 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவை:


நீலவழித்தடத்தில் சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஏஜி டி.எம.எஸ் நந்தனம் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேல்நிலை மின்சார உகாணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரை தொழில் நுட்ப வல்லுனர்கள் சரி செய்யும் பணியில் துரிதமாக ஈடுப்பட்டுள்ளாளர். தொழில்நுட்ப கோளாறு வெகு விரைவில் சரி செய்யப்பட்டு இயக்கப்படும்  மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும்.


பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத திடீர் தடங்கல்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருந்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.