துபாய் செல்ல போலி விசா தயாரித்து கொடுத்தவர் கைது

Continues below advertisement

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் ( வயது 26 ) இவர் ஆன்லைன் வாயிலாக அறிமுகமான பெர்பெக்ட் மேன் பவர் கன்சல்டன்ட் உரிமையாளர் சேரலாதன் ( வயது 49 ) என்பவரை தொடர்பு கொண்டு துபாய் செல்ல விசா வாங்கி தரும்படி கூறியுள்ளார்.

அதற்காக, கடந்த ஜூன் மாதம் ஆவடி சிந்து நகரில் உள்ள சேரலாதன் அலுவலகத்தில் வைத்து 1.30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அதன்படி சேரலாதன் இ - விசா டிக்கெட் எடுத்து ஆகாஷிக்கு அனுப்பியுள்ளார்.

Continues below advertisement

கடந்த ஜூலை 10 ம் தேதி, அதை எடுத்து கொண்டு, துபாய் செல்ல சென்னை விமான நிலையம் சென்ற போது விசா போலியானது எனக் கூறி, ஆகாஷை திருப்பி அனுப்பியுள்ளனர். இது குறித்து சேரலாதனிடம் கேட்ட போது பணத்தை திருப்பி தர முடியாது என கூறியுள்ளார். இது குறித்து ஆவடி போலீசாரிடம் ஆகாஷ் புகார் அளித்தார். விசாரித்த போலீசார் சேரலாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மூட்டை , மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ குட்கா பறிமுதல்.

சென்னை பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரும்பாக்கம் பிரதான சாலையில் உள்ள ஒரு கடையில் , குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, பள்ளி கரணை தனிப்படை போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த கடையில், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அக்கடையில் சோதனை மேற்கொண்ட போலீசார், அங்கு மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.

அதன்பின், கடை உரிமையாளர் நந்தலால் குமார் ( வயது 29 ) என்பவரை கைது செய்து அவரது காரை சோதனை செய்தனர். காரிலும் புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 403 கிலோ குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், நந்தலால் குமாரை ஆலந்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

துணை முதல்வர் உதய நிதியின் உதவியாளர் எனக் கூறி , ஊராட்சி செயலரிடம் பணம் கேட்டு மிரட்டியவர் நபர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலைசாமி ( வயது 48 ) வாடாதவூர் கிராம ஊராட்சி செயலர். இந்நிலையில், 15 நாட்களுக்கு முன், சென்னையில் இருந்து மொபைல் போனில் தொடர்பு கொண்ட தாமோதரன் ( வயது 53 ) என்பவர் தன்னை துணை முதல்வரின் உதவியாளர் என திருமலைசாமியிடம் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து, ஊராட்சிகளுக்கு தேவையான பணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து அதிகாரிகளிடம் பேசி ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். இதையடுத்து, 10,000 ரூபாய் தனக்கு கொடுக்குமாறு தாமோதரன் கேட்டதாகவும், அதை தர ஊராட்சி செயலர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதற்கு துணை முதல்வரின் உதவியாளர் என தெரிந்தும் , பணம் தராமல் இருக்கிறாய். நான் பணம் கேட்ட விஷயத்தை யாரிடமாவது சொன்னால், உன்னை கொன்று விடுவேன் என திருமலைசாமியை தாமோதரன் மிரட்டி உள்ளார். இதையடுத்து திருமலைசாமி உத்திரமேரூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து தாமோதரனை போலீசார் கைது செய்தனர்.