தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இன்று (அக்.21) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், கே கே நகர், மாதவரம், பூந்தமல்லி என ஐந்து இடங்களில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்
சென்னையில் இருந்து மொத்தம் 3,537 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாள்களுக்கு மொத்தம் 10,518 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அரசு பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பினால் நசரத்பேட்டை வழியாக ஊரப்பாக்கம் செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டியை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பும் வகையில், இன்று முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரையும், அக்டோபர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 27 ஆம் தேதி வரையும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது.
தீபாவளியை முன்னிட்டு, அக்டோபர் 24ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் ஆறு இடங்களில் இருந்து மாநிலம் முழுவதும் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள பிற மாவட்டங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
சென்னையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்
அதன்படி, ரெட்ஹில்ஸ், பொன்னேரி, கும்முடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரப் பிரதேசம் செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்றும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, சிதம்பரம், கடலூர் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பெருநகர பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, கும்பகோணம், பண்ருட்டி பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், புதுச்சேரி, கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரணி, வேலூர், ஆற்காடு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்
இதேபோல் திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிகமாக 3 பேருந்து நிலையங்களில் இருந்து நேற்று முதல் சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சோனா, மீனா தியேட்டர் அருகிலும், மதுரை மற்றும் புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் ரவுண்டானா அருகிலும் இருந்து புறப்படும். இங்கு இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் இயங்கும்.
திருச்சி மண்டல இயக்கப் பகுதிகளான லால்குடி, திருவெறும்பூர், மணப்பாறை, துவரங்குறிச்சி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இன்று முதல் 23ஆம் தேதி வரை சென்னை கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், பெரம்பலூர், துறையூர் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு 150 சிறப்பு பேருந்துகளும், தஞ்சைக்கு 50 பேருந்துகளும், மதுரைக்கு 50 சிறப்பு பேருந்துகளும் ,கோவைக்கு 20 பேருந்துகளும், திருப்பூருக்கு 20 பேருந்துகளும், திண்டுக்கல் மற்றும் பழனிக்கு 25 சிறப்பு பேருந்துகளும், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில் இருந்து சென்னைக்கு 50 சிறப்பு பேருந்துகளும், துறையூர் மற்றும் பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு 20 சிறப்பு பேருந்துகளும், இதேபோல் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிக்கு 50 சிறப்பு பேருந்துகளும், பெரம்பலூருக்கு 25 சிறப்பு பேருந்துகளும், துறையூருக்கு 25 பேருந்துகளும் என மொத்தம் 485 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் tnstc.in என்ற இணையதளத்திலிருந்து ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னதாகத் தெரிவித்துள்ளார்.