திருவள்ளூர் மாவட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து சம்பந்தப்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, விளக்கமளிக்க உரிய அவகாசம் அளிக்காமல் ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாகவும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து அரசு சாலை அமைத்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

 

அரசு தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  நிலம் தங்களுக்கு சொந்தமானது என்பதை மனுதாரர்களால் நிரூபிக்க முடியவில்லை எனவும், பொது மக்கள் மட்டுமல்ல நீர்நிலை ஆக்கிரமிப்பில் அரசே ஈடுபட்டாலும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

 

மேலும், குடிநீர் ஆதாரமாக மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க தவறுவதால் தான், ஒருபக்கம் வறட்சியும்,  மறுபக்கம் வெள்ளத்தையும்  எதிர்கொள்ள நேரிடுகிறது என குறிப்பிட்டுள்ளனர்.

 

நீர்நிலையை பாதுகாப்பது அரசின் கடமை என தெரிவித்த நீதிபதிகள், அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்புக்கு வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளனர். மேலும், இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மை பாதுகாக்கும் என குறிப்பிட்ட நீதிபதிகள், சுற்றுச்சூழலை பாதுகாக்க தவறியதால் தான் புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக கூறியுள்ளனர்.

 

காடுகள், நீர்நிலைகளை பாதுகாப்பது மனிதர்களின் கடமை என குறிப்பிட்ட நீதிபதிகள்,  இயற்கைக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தினால் சுனாமி, பூகம்பம் போன்ற பேரிடர்களாக இயற்கை மனித குலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.