சேமாத்தம்மன் கோயில் 4,000 குடமுழுக்கு
சென்னை பெரம்பூரில் நூற்றாண்டு பழமையுடன் பிரசித்தி பெற்ற அருள்மிகு சேமாத்தம்மன் திருக்கோயிலில் இன்று காலை இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 4,000 வது குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 2016 - ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில் இந்து சமய அறநிலையத் துறையின் 4,000 வது கோயில் குடமுழுக்கு பெருவிழாவாக நடந்தது. இக்கோயில் உள்பட தமிழ்நாட்டில் உள்ள 75 திருக் கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குடமுழுக்கு நன்னீராட்டு திருவிழா நடந்துள்ளது.
அமைச்சர் சேகர்பாபு , மேயர் பிரியா , தாயகம் கவி எம்.எல்.ஏ பங்கேற்பு
ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகம விதிப்படி குடமுழுக்கு நடைபெறாத திருக்கோயில்களை கண்டறிந்து, அவற்றில் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தும் பணிகளை கடந்த நான்கரை ஆண்டில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையிலான இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில், சென்னை திரு.வி.க நகர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர், சேமாத்தமன் திருக்கோயிலில் 4,000 வது குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ மற்றும் சிவாச்சாரியார்கள் உள்பட ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சமபந்தி விருந்து
இக்கோயிலில் கடந்த திங்களன்று முதல் கால யாக வேள்வி நடத்தப்பட்டது. இன்று காலை 4 ம் கால யாக வேள்வியுடன், சேமாத்தம்மன் கோயிலின் ராஜ கோபுரம் மற்றும் இதர கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டன. இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் மற்றும் சமபந்தி உணவு பரிமாறப்பட்டது.
இதில் கௌமார மடம், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், வேளக் குறிச்சி ஆதீனம் தவத்திரு சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பெரும்புதூர் ஜீயர் தவத்திரு அப்பன் உலகறிய ராமானுஜ எம்பார் சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் துரை.ரவிச்சந்திரன், பொ.ஜெயராமன், சி.கல்யாணி, இணை ஆணையர் ஜ.முல்லை உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
