பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்
பீகாரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கவுரவ் குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்களின் 2 வயது மகனுடன் சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் செக்யூரிட்டி வேலை பார்த்து வந்துள்ளார். இதன் பின் மனைவி மற்றும் குழந்தையுடன் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலேயே கவுரவ் குமார் வசித்து வந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு குடியிருப்பில் தனியாக இருந்த பீகார் இளைஞரின் மனைவியிடம் மர்ம நபர்கள் அத்து மீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி உடனடியாக அலறி இருக்கிறார். இந்த அலறல் சத்தம் கேட்டு உடனடியாக பீகார் இளைஞர் கவுரவ் குமார் அங்கு வந்திருக்கிறார்.
இதன் பின் கவுரவ் குமாரின் மனைவியை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனை தடுக்க வந்த கவுரவ் குமாரை அந்த கும்பல் அடித்தே கொலை செய்திருக்கின்றனர். இதன் பின் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அவரது மனைவியையும் கொடூரமாக கொலை செய்திருக்கின்றனர்.
கண்ணீர் விட்டு அழுத 2 வயது குழந்தையையும் அந்த குடும்பல் கொடூரமாக கொலை செய்திருக்கிறது. இந்த கொடூர கொலையை செய்து விட்டு இளைஞரின் உடலை சாக்கு மூட்டையில் கட்டிக் கொண்டு அடையாறு இந்திரா நகர் ஆற்றங்கரையோரம் வீசியுள்ளனர். அதே போல் குழந்தையின் உடலை அடையாறு ஆற்றங்கரையோரம் வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பியுள்ளனர்.
நண்பர்களே எதிரியாக மாறிய தருணம்
இந்த விவகாரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், கவுரவ் குமாரின் நண்பர்கள் உட்பட 9 பேரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அந்த விசாரணையில் அவரது நண்பர்களே கொடூரமாக கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் பின் நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஷ், சிக்கந்தர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
கொடூரமாக ஒரு குடும்பத்தை கொலை செய்து விட்டு தப்பிப்பதற்காக அந்த கும்பல், உடலை வேறு இடத்தில் வீசி சென்றிருக்கின்றனர். அதாவது தரமணியில் கொலை செய்து விட்டு, கவுரவ் குமார் மற்றும் குழந்தையின் உடலை அடையாறு ஆற்றங்கரையோரம் வீசி சென்றுள்ளனர். இதற்கு இடையில் மட்டும் சுமார் 5 கிமீ தூரம் உள்ளது.
இதனால் அந்த கும்பல் திட்டமிட்டே இப்படியான சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தகவல் கூறுகின்றனர். அதே போல் மனைவியின் உடல் இதுவரை கிடைக்கவில்லை. அவரது உடலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.