வரும் செப்டம்பர் 10ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தவும், ஊர்வலங்கள் செல்வதற்கும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தி வழிபாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசின் இந்த தடைக்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் இந்து முன்னணி அமைப்பினர், மற்றும் விநாயகர் சிலை நல சங்கத்தினர் பல்வேறு விதமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 



 

அதன்படி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் அஸ்வத்தாமன் தலைமையில் தமிழ்நாடு விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக்குக்கு அனுமதி விநாயகர் சதுர்த்திக்கு தடையா? இந்துக்களை வஞ்சிக்கும் ஸ்டாலின் என பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். மேலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு அனுமதி கொடுக்க வலியுறுத்தி திடீரென்று 3 அடி விநாயகர் சிலைகளை சாலையில் வைத்தும், கைகளில் சிறிய விநாயகர் சிலைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, பின் விநாயகர் சதுர்த்திக்கு தடை விதித்த காரணத்தினால் பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர், விநாயகர் சிலை செய்பவர்கள், பொது வெளியில் விநாயகர் சிலை வைக்கும் பொழுது அதற்கு பந்தல் பொடுபவர்கள் என பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர் எனவும். இதில் குறிப்பாக விநாயகர் சிலை செய்பவர்கள் தான் மிகவும் பாதிக்கப்படுவார்கள் ,அவர்களுக்கு சென்ற வருடமும் சரியாக சிலை விற்பனை நடைபெறவில்லை இப்பொழுதும் அவ்வாறான சூழலே ஏற்பட்டுள்ளது.

 



 

இந்த கொரோனா காலகட்டத்தில் பல்வேறு தரப்பு மக்களும் பலவிதத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர் ஆனால் சிலை செய்பவர்களுக்கு வருமானம் வரும் வாய்ப்பு இதுபோன்ற திருவிழா காலங்களில் தான் அதுவும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தியில் தான் சிறப்பாக வேலைகள் செய்யப்பட்டு தாங்கள் வருமானம் பார்க்கும் காலம் எனவும் ஆனால் தற்பொழுது அதுவும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.