தீபாவளி பண்டிகை நேற்று சிறப்பாக நிறைவுற்ற நிலையில், சென்னையில் காற்று மாசுபாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
" தீபாவளிக்கு வெடித்த பட்டாசு புகையால் சென்னை இப்பொழுது வரை மூச்சு விட முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. சென்னையின் பல இடங்களில் காற்றின் தரம் சராசரியாக 500 AQI என்கிற அபாய அளவுக்கு மேல் பதிவாகி உள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி உலகிலேயே அதிகம் காற்று மாசடைந்துள்ள நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டெல்லியை பின்னுக்குத் தள்ளி சென்னை முதலிடத்தை பிடித்திருப்பது வருத்தமளிக்கிறது.
ஒரு நல்ல ஆரோக்கியமான காற்று என்றால் AQI- Air Quality Index 0-50AQI வரை இருத்தல் வேண்டும். பொதுவாக தென் சென்னையின் AQI 50 -60AQI வரை இருக்கும். ஆனால் நேற்று இரவு தீபாவளி தினத்தன்று (24.10.2022) சென்னையின் காற்றின் தரம் 786AQI வரை பதிவாகி உள்ளதாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. இது ஒருவர் 31 சிகெரட் பிடித்ததற்கு சமமாகும்.
காற்றின் தரம் 300AQI க்கு மேல் சென்றால் அது அபாயகரமான நிலையாகக் கருத்தப்படுகிறது. 24.10.2022 இரவு முதல் ஆலந்தூர், பெருங்குடி, சவுக்கார்பேட்டை, திருவல்லிக்கேணி,நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், வேளச்சேரி, கிண்டி, மணலி, என்னூர், கொடுங்கையூர், தி. நகர், பாரிஸ், வண்டலூர், அடையார் உட்பட சென்னையின் பல பகுதிகளில் காற்றின் தரம் யாரும் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு அபாயகரமாக சென்றுள்ளது.
தீபாவளி அன்று காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6மணி வரை காற்று தரக்குறியீடு அதிகபட்சமாக சவுக்கார்பேட்டையில் 786AQI ஆகவும், நுங்கம்பாக்கத்தில் 563, வளசரவாக்காதில் 545 ஆகவும் பதிவாகி உள்ளது. இரவு 11மணி முதல் 12மணி வரை அளவில் சென்னையின் நுண்துகள் அளவுகள் 950 ug/m3 ஆக பதிவாகியுள்ளது, இது கடந்த ஆண்டுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகம் ஆகும்.
தீபாவளி அன்று இரவு 8மணிக்கு மேல்தான் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்தது, இரவு 8 மணிக்கு மேல் சென்னையின் நான்கு காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் இயங்கவில்லை என்பதும், இரவு 11மணி முதல் அதிகாலை 4 மணி வரை மணலி கண்காணிப்பு நிலையம் மட்டுமே செயல்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. வழக்கம்போல வாகனங்கள் பயன்படுத்தி தொழிற்சாலை இயக்கியபோது இருந்ததை விட தீபாவளி நாளன்று சென்னையின் காற்றின் தரம் 10-15 மடங்கு அதிகமாக பதிவாகி உள்ளது.
வாகனத்தில் இருந்து வெளிவரும் புகையில் நச்சு வாயுக்களான கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், சல்பர் ஆக்சைடுகள், ஹைட்ரோ கார்பன், மற்றும் நுண்துகள்கள் இருக்கும். ஆனால், பட்டாசு வெடிக்கும் பொழுது நுண் துகள்களுடன் ஆர்செனிக், லித்தியம், காட்மியம், ஆன்ட்டிமோனி, பாதரசம் போன்ற கன உலோகங்களின் நச்சுக்களும், பேரியம், பொட்டாசியம், கந்தகம், நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரஜன் டைஆக்சைடு, ஸ்ட்ரோடியம், , க்ளோரைடு, ஓசோன், பெர்க்ளோரைடு, அலுமினியம், தாமிரம் போன்ற உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பல்வேறு நச்சு சேர்மங்களும் வெளியேறுகின்றன.
நேற்று இரவு வெடித்த பட்டாசு புகை காரணமாக எத்தனை கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டனர், எத்தனை ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர், எத்தனை பேர் காற்று மாசின் காரணமாக உயிரிழந்தார்கள் என்கிற பட்டியலை அரசு வெளியிட வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு அறிவார்ந்த சமூகம் இப்படி பண்டிகை என்ற பெயரில் பட்டாசு வெடித்து சுவாசிக்கும் காற்றை விசமாக்குவது ஏற்புடையதல்ல. பட்டாசு ஒரு சூழல் பிரச்சினை மட்டுமல்ல. சமூகநீதிப் பிரச்சினையும்கூட. பட்டாசுகள் ஏராளமான அளவில் கையாள முடியாத நச்சுத் திடக்கழிவுகளை உருவாக்குகின்றன. கேளிக்கை விரும்பிகள் பட்டாசுகளை தெருக்களிலும் குடியிருப்பு வளாகங்களிலும் வெடித்துவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட, இந்த குப்பைகள் அடுத்த நாளில் யாரால் அகற்றப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது.
பட்டாசுகள் வெடிப்பதற்கு முன்பு இருப்பதைவிட அவற்றின் எச்சங்களில் முழுமையாக எரியாத நச்சு வெடிமருந்துத் துகள்கள் நிரம்பியிருக்கும். இந்த நச்சுக்குப்பையை எந்த பாதுகாப்பு வழிமுறைகளுமின்றி நகரின் விளிம்புநிலை மனிதர்களான தூய்மைத் தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் அப்புறப்படுத்துகின்றனர். இந்த ஆண்டு மட்டும் சென்னையில் 211 மெட்ரிக் டன் குப்பைகள் அவ்வாறு அகற்றப்பட்டிருக்கின்றன. உண்மையான அளவு இதைவிடப் பலமடங்கு இருக்கும் என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும்.
இக்குப்பையை அவர்கள் மட்டும் சேகரிக்கும் நிலைக்கு வலிந்து தள்ளப்படுவது ஒரு சமூக அவலமும் அநீதியுமாகும். சாதாரண மட்கும் மட்கா கழிவுகளையே கையாள்வதற்கான உட்கட்டமைப்புகள் இன்னும் சரியாக உருவாக்கப்படாத நிலையில் இந்த நச்சுக் கழிவுகள் இறுதியாக என்ன செய்யப்படுகின்றன என்பதையும் அந்தத் தொழிலாளர்களுக்கு இவை என்ன பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதையும் எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
சூழலைக் கெடுக்கும் மனித ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் பட்டாசு வெடிக்கும் பழக்கத்தினை தமிழ்ச் சமூகம் இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும். டெல்லி அரசு பட்டாசுக்கு முழுமையான தடை விதித்ததை போன்று தமிழ்நாடு அரசாங்கமும் பட்டாசு தடையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.