Cyclone Michaung: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு வேலை கூலி எதுவும் வாங்காமல் பழுது பார்த்து தரப்படும் என டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


தலைநகரை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல்:


மிக்ஜாம் புயல் தமிழகத்தில் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.  கடந்த திங்கள் கிழமை பெய்த கனமழையால் சென்னை மாநகரமே முடங்கியுள்ளது.  தற்போது சென்னையில் மழை இல்லாத சூழலில், தண்ணீர் சில இடங்களில் வடிந்துள்ளது. ஆனால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. பலரும் தங்கள் குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர்.


மேலும், சென்னையை ஒட்டுமொத்தமாக வெள்ளம் புரட்டி போட்டதில் அரசும், மக்களும் முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டதில் உயிர்ச் சேதம் என்பது பெருமளவு தவிர்க்கப்பட்டது. ஆனால் பொருட்சேதம் என்பதை தவிர்க்க முடியவில்லை. கடுமையான வெள்ளத்தினால் ஆயிரம் கிலோவில் இருந்து மூன்று ஆயிரம் கிலோ வரை உள்ள கார்கள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டது. இது மட்டும் இல்லாமல் ஒரு சக்கரவாகனங்களை பலர் பாதுக்க எவ்வளவோ முயற்சித்தும் அவையும் வெள்ளத்திற்கு இரையாவதைத் தடுக்க முடியவில்லை. மேலும், ஆட்டோக்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.  இதனால் ஆட்டோ ஓட்நர்களின் வாழ்வாதாரம் பாதிப்பட்டது.  இந்த வெள்ளத்தால் சென்னையில் உள்ள லட்சக்கணக்கான வாகங்கள் சேதமடைந்துள்ளது. 


டிவிஎஸ் நிறுவனம் அறிவிப்பு:


கடந்த ஒரு வாரமாக வெள்ளத்தால் வருமானம் இன்றி சமானிய மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் பழுதான பைக், ஆட்டோ, கார்களின் செலவு இழுத்திருக்கிறது. எனவே, வாகன தயாரிப்பு நிறுவனங்கள், இன்சூரன்ஸ் கம்பெனிகள் வாகனங்கள் பழுதுநீக்கும் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், டிவிஎஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளது. அதாவது, மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், வேலை கூலி எதுவும் வாங்காமல் பழுது பார்த்து தரப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. டிசம்பர் 18ஆம் தேதி வரை இந்த சலுகை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், வெள்ளம் பாதித்த இடங்களில் இருந்து வாகனங்களை சர்வீஸ் செண்டருக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வீஸ்க்கு கொண்டு வரும் வாகனங்களின் எஞ்சினை Restart செய்ய வேண்டாம் என்றும் நிறுவனம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு சென்னை மக்களுக்கு திருப்தி அளித்துள்ளது.