மிக்ஜாம் புயலினால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களான தலைநகர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகியவை கடும் வெள்ளத்தினை எதிர்கொண்டது. இதில் மக்கள் பெரும் துயரத்தினை எதிர்கொண்டனர். குறிப்பாக பலர் தங்களது வீடுகளை இழந்தனர். பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்கள் தங்களது புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை இழந்தனர். இது மட்டும் இல்லாமல் பலர் தங்களது ரேசன் கார்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, கல்விச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ்கள், வீட்டுமனைப் பட்டாக்கள் என பல அரசு ஆவணங்களை இழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் இரண்டு சக்கர வாகனங்களையும் நான்கு சக்கர வாகனங்களையும் இழக்கும் நிலைக்கு ஆளாகினர்.
இந்நிலையில் நாளை முதல் மழை வெள்ளத்தால் இழந்த ஆவணங்களை அரசு நடத்தவுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து கட்டணமில்லாமல் பெற்றுக்கொள்ளலாம் என முதலமைச்சர் கடந்த 9ஆம் தேதியிட்ட அரசாணையில் உத்தவிட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, ”தமிழ்நாட்டில் ''மிக்ஜாம்" புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் பல்வேறு மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றை மீண்டும் பெறும் வகையில் அதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி பொது மக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில் குறுவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் வருகிற 11-12-2023 (திங்கட்கிழமை) அன்றும், சென்னை மாவட்டத்தில் சென்னை மாநகராட்சியின் கோட்ட வருகிற அலுவலகங்களில் 12-12-2023 (செவ்வாய்க்கிழமை) அன்றும் தொடங்கப்படும்.
சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிக்கப்படும். மேற்படி சிறப்பு முகாம்களில், பொதுமக்களின் வசதிக்கென இ-சேவை மையங்களும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக சென்னை மாவட்டத்தில் எங்கெங்கு சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “ சென்னை மாவட்டத்தில், மிக்ஜாம் புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக, ஆதார் அட்டை குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கன சிறப்பு முகாம்கள் நடத்தி, பொதுமக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களில் (1 முதல் 15 வரை) உள்ள கீழ்கண்ட 46 பகுதி அலுவலகங்களில் 12-12-2023 (செவ்வாய்க் கிழமை) அன்று முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 46 இடங்களில் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்கள் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்த நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணிகள் வரும் 16ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.