ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வீடுகள் தொடங்கி, டீக்கடைகள் வணிக வளாகங்கள் என அனைத்தும் மிக்ஜாம் புயலினால் ஒட்டுமொத்த வட தமிழ்நாடும் நாசமாகியுள்ளதை பற்றிய பேச்சாகத்தான் உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை முழுவதுமாக ஸ்தம்பித்துவிட்டது. இதில் ஒட்டுமொத்த ஊடகங்களும் மத்திய சென்னையைத் தான் ஃபோகஸ் செய்து வந்தது.
திருவொற்றியூரில் கச்சா எண்ணெய்:
ஆனால் வடசென்னை குறித்தான செய்திகள் இன்று முதல் அதிகளவில் வெளிவரத்தொடங்கியது. ஒட்டுமொத்த சென்னையில் அதிகப்படியான சென்னைவாசிகள் வசிக்கும் பகுதியான வட சென்னையின் முக்கிய இடமாக உள்ள திருவற்றியூரின் நிலை முற்றிலும் அபாயம் சூழ்ந்ததாகவே உள்ளது.
மிக்ஜாம் புயலால் திருவொற்றியூரில் மழை நீரில் கச்சா எண்ணெய் கலந்து குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் தங்களது உயிரினை கையில் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு நொடியையும் கழித்து வருகின்றனர். புயல் சென்னையைக் கடந்த பின்னர், புழல் ஏரி கொள்ளளவு முழுவதும் நிரம்பியது. ஏரி நிரம்பி வழிந்ததால் உபரி நீரானது திறந்து விடப்பட்டு, இந்த உபரி நீரானது கொசஸ்தலை ஆற்று வழியாக எண்ணூர் முகத்துவாரத்தை அடைந்து கடலில் கலக்கும்.
குடியிருப்புகளில் வெள்ளம்:
ஆனால் புயலின் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டதால் எண்ணூர் முகத்துவாரம் மட்டும் இல்லாமல் சென்னை கடற்கரையில் உள்ள மூன்று முகத்துவாரங்களில் இருந்து தண்ணீரை கடல் உள்வாங்கவில்லை. இதனால் கொசஸ்தலை ஆற்றில் நிரம்பி வழிந்த தண்ணீர் திருவொற்றியூர், மணலி, சடையன்குப்பம் உள்ளிட்ட இடங்களில் வழிந்தோடியது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. திருவொற்றியூரில் பல்வேறு எண்ணெய் நிறுவனங்கள் இயங்கி வருவதால், ஆற்றிலிருந்து வெளிவந்த கச்சா எண்ணெய் கழிவுகள் மழைநீரில் கலந்து குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் அச்சத்திற்கு ஆளாகினர். குறிப்பாக வீட்டின் அனைத்து இடங்களிலும் கச்சா எண்ணெய் கழிவுகள் படிந்துள்ளதால் மக்கள் வீட்டில் சமைக்கக் கூட முடியாமல் அச்சத்தில் உள்ளனர். திருவொற்றியூரின் ஒரு வீட்டில் கச்சா எண்ணெய் காரணமாக தீ விபத்து ஏற்பட்டால் ஒட்டுமொத்த திருவொற்றியூருமே தீக்கிரையாகிவிடுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இது மட்டும் இல்லாமல் வீட்டிற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களை கச்சா எண்ணெய் கழிவுகள் பரவியுள்ளது. தண்ணீரில் கலந்த கச்சா என்னை கழிவுகள் காரணமாக ஒரு வித எரிபொருள் வாசனை திருவெற்றியூர் பகுதி முழுவதும் வீசி வருவதால் சுவாச பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மழை நின்று மூன்று நாட்கள் ஆகியும் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மழையால் மக்களுக்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளை கண்டறிய மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்றும், திருவொற்றியூர் பகுதி முழுவதும் படர்ந்துள்ள எண்ணெய் கழிவுகள் முறையாக அகற்றவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.