ஆந்திரா,ஒடிசா மாநிலங்களை அச்சுறுத்தும் அசானி புயல் காரணமாக விசாகப்பட்டிணம், ஹைதரபாத், மும்பை, ஜெய்பூா் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமான சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
அசானி புயலால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக விசாகப்பட்டிணம், ஹைதரபாத், மும்பை, ஜெய்பூா் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமான சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய ஆணையம் ( Chennai airport authority) தகவல் வெளியிட்டுள்ளது. இந்த விமானங்கள் ரத்து பற்றிய தகவல்கள் பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் நேற்று மாலையே கொடுத்துவிட்டதால், பயணிகள் விமானநிலையத்திற்கு வந்து அவதிப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர, ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலத்தை அச்சுறுத்தும் "அசானி" புயல் காரணமாக சென்னையில் இருந்து இன்று காலை 7 மணிக்கும், காலை 10:40 மணிக்கும் விசாகப்பட்டினம் செல்லும் 2 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதைப்போல் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் இன்று காலை 10:40 மணிக்கும், பகல் 1.45 மணிக்கும் சென்னை வரவேண்டிய 2 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏா் ஏசியா விமான நிறுவனம் சென்னையிலிருந்து ஹைதராபாத்,ஜெய்பூா்,மும்பை ஆகிய இடங்களுக்கு செல்லும் 3 விமானங்கள், ஹைதராபாத்,ஜெய்பூா்,மும்பை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு வரும் 3 விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இதையடுத்து அசானி புயல் காரணமாக சென்னை விமானநிலையத்திலிருந்து விசாகப்பட்டிணம், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
அசானி புயல் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்