தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கத்தால், வேலூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து இருந்தது . மேலும் கொரோனா நோய் தொற்றால் உயிரிழப்பவர்களின்  எண்ணிக்கை 10  , 20 என்று தொடர்ந்து இருந்து இலக்கு எண்களிலே இருந்து வந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த இரு வாரங்களாக தமிழ் நாடு அரசு முழு ஊரடங்கை அறிவித்திருந்தது. மருத்துவ காரணங்களை தவிர வேறு எதற்கும் வீட்டைவிட்டு செல்லக்கூடாது என்ற உத்தரவை  பிறப்பித்து இருந்த  தமிழக அரசு, மக்களுக்கு அன்றாட காய்கறி மற்றும் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய சமையல் பொருட்களை வாகனங்கள் மூலம் வீட்டுக்கே சென்று விநியோகிக்கும் திட்டத்தை அமல்படுத்தியது  .




மேலும் மருந்தகங்களை தவிர்த்து வேறு எந்த கடைகளும் செயல்படக்கூடாது என்ற உத்தரவையும் பிறப்பித்திருந்தது. தமிழ் நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால், ஆயிரங்களில் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு இன்று (திங்கட்கிழமை) 218-ஆக குறைந்துள்ளது , மேலும் 418 கொரோனா நோயாளிகள் இன்று குணமடைந்து அவர்களது வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். தற்பொழுது வேலூர்  மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு 2030 நபர்கள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இன்றைய மருத்துவ அறிக்கையின்படி  இரண்டு கொரோனா நோயாளிகள் உயிர் இழந்துள்ளனர்.


இந்நிலையில் தளர்வுக்குள் அறிவிக்கப்பட்ட முதல் நாளான இன்று வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாங்காய் மண்டியில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக மொத்த காய்கறி மார்க்கெட்டில், வியாபாரிகள் , பொதுமக்கள் என மக்கள் கூட்டம் காலையில் இருந்தே அலைமோதும் காட்சிகளை பார்க்க முடிந்தது முகக்கவசம் , சமூக இடைவெளி  உள்ளிட்ட எந்த கோட்பாடுகளையும் பின்பற்றாமல், மார்க்கெட்டில்  குவித்து வைத்திருந்த  வெளிமாநில காய்கறி மற்றும் பழ வகைகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. முகக்கவசங்களை அணியாமல் மக்கள்  முண்டியடித்துக் கொண்டு பொருட்களை வாங்க குவிந்த  காட்சிகளை பார்க்கும்பொழுது கொரோனா நோய் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு , மக்கள் சகஜ நிலையில் உள்ளதுபோல் ஒரு பிம்பத்தை காட்டியது  மாங்காய் மண்டி வளாகம்  இதேபோன்ற மக்கள் கூட்டம் வேலூர் மாவட்டத்தில் இன்று செயல் பட்ட பெரும்பாலான மீன் மற்றும் இறைச்சி கடைகளிலும் தென்பட்டது .




கொரோனா நோய்த்தொற்று இன்னும் முழுமையான கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்படாத நிலையில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் இந்த அலட்சியப்போக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் வேலூர் நகரப்பகுதிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர் வேலூர் மாவட்ட அதிகாரிகள் .