சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 8591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, கடந்த  24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில்  மூன்றில் ஒரு பகுதியினர் சென்னையில் உள்ளனர். மேலும், தேனாம்பட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட மண்டலங்களில் கொரோனா பரவல் மிகத்தீவிரமாக உள்ளது.  


சென்னையின் தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 29.7 சதவிகிதம் ஆகும். அதாவது, சென்னையில்  மேற்கொள்ளப்படும் 100 சராசரி கொரோனா பரிசோதனை மாதிரிகளில் குறைந்தது 30 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தின் சராசரி விகிதம் 17 விழுக்காடாக உள்ளது. தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் தேசிய விகிதம் 14.43 விழுக்காடாக உள்ளது.  


டெல்டா  ரக வைரஸை விட ஒமிக்ரான் ராக வைரஸ் அதிக பரவல் தன்மை கொண்டு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. தமிழகத்திலும் திடீரென்று கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்திருப்பதற்கான காரணம் ஒமிக்ரான் உருமாற்றமே என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். 



தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் சென்னையில் உள்ளனர்  


 


தென்னாபிரிக்காவில் முந்தைய அலையுடன் ஒப்பிடுகையில் (பீட்டா, டெல்டா ) ஒமிக்ரான் பாதிப்பின் தீவிரத்தன்மை சற்று குறைவாக இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது. மேலும், சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், தற்போது வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ், இதுவரை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வந்த டெல்டா  ரக வைரஸை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிவிடும் வல்லமை கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   


தீவிர சிகிச்சை தேவைப்படும் விகிதம்: 


எனவே, ஒமிக்ரான் பரவலில், புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையைத் தாண்டி, மருத்துவமனை அல்லது தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை தேவைப்படும் எண்ணிக்கை விகிதத்துக்கு அரசு நிர்வாகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது.  


 


முந்தைய டெல்டா  அலையுடன் ஒப்பிடுகையில், ஒமிக்ரான் பரவலின் போது நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போக்கு குறைந்து காணப்படுகிறது. உதாரணமாக, கடந்தாண்டு மே மாதம் கொரோனா இரண்டாவது அலை உச்சாத்தில் இருந்தது. 2021, மே 21 அன்று, சென்னையில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 49,236 ஆக இருந்த நிலையில், 21% பேர் ஆக்சிஜன் வசதி மற்றும் தீவிர சிகிச்சைப் படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கடந்த 2022 ஜனவரி  16 அன்று நிலவரப்படி, கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெறும் 54685 பேரில், 3% பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   


இதையும் காண்க: பொதுவாக கொரோனா பெருந்தொற்றில், குறைவானவர்களுக்கு மட்டுமே நுரையீரல் பாதிப்பு ( நிமோனியா) ஏற்படுகிறது. அப்போது நுரையீரலில் உள்ள சிறு காற்று பைகள் வீக்கமடைகின்றன. கொரோனா நோயாளிகளில், சிலருக்கே மூச்சுத் திணறல் கடுமையான நிலைக்கு செல்லும்போது ஆக்ஸிஜன் உதவி தேவைப்படும். இருந்தாலும், தொற்றுப்பரவலை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. 


இறப்பு எண்ணிக்கை: 


இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை, கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களைப் பற்றிய விவரங்களை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அளித்துள்ளது.  


கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின்படி, ஜனவரியில் இருந்து 191 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.  






இறந்தவர்களில் 94.5 சதவீதம் பேருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய், நாள்பட்ட சிறுநீரக பிரச்னைகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருந்துள்ளன.


85 சதவீதம் பேர் 50 வயதுக்கு மேலானவர்கள். 


சமாளிக்க முடியாத இணை நோய்கள் கொண்ட மூத்த குடிமக்களாக இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த பிரிவில் உள்ளவர்களின் இறப்பு எண்ணிக்கை விகிதம்,(159 பேர்)  பேர் 83.2% ஆக உள்ளது. 


இறந்தவர்களில், 66 பேர்% தடுப்பூசி போட்டுக் கொள்ளாத (அ) முழு தவணை தடுப்பூசி டோஸ்களை போட்டுக் கொள்ளாதவர்கள். 


60 வயதிற்கு மேற்பட்டவர்களில், வெறும் 46 சதவீதம் பேர் மட்டுமே  இரண்டு கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால், மாநிலத்தின் மக்கள்தொகையில் 64% பேர் இரண்டு கட்ட தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர். எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மூத்த குடிமக்கள் சற்றே பின்தங்கியுள்ளனர். 


எனவே, இணை நோய்கள் கொண்ட மூத்த குடிமக்களுக்கு  தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். மேலும்,  நாள்பட்ட சிறுநீரக பிரச்னைகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட பிரச்னைகள் போன்ற கோவிட் அல்லாத இன்றியமையாத மருத்துவ சேவைகளில் கவனம் செலுத்த வேண்டும்.