உயர் நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி.காதர் பாஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவர் மனுவில், பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து அதிகார ரீதியில் தன்னை பழிவாங்கும் நோக்கிலும் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததாகவும், ஜாமீனில் விடுதலையான தன்னை மற்றொரு பொய் வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
உயர் நீதிமன்றத்தையும், சிறப்பு நீதிமன்றத்தையும் தவறாக பயன்படுத்திய பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்துறை செயலாளருக்கும், டி.ஜி.பி.,க்கும் மனு அளித்ததாகவும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால் தன் புகாரின் அடிப்படையில் பொன் மாணிக்கவேல் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:
காவல்துறை அதிகாரிகளான காதர் பாட்ஷா, பொன் மாணிக்கவேல் ஆகியோருக்கு தேசத்தின் பெருமையை பாதுகாப்பதில் பொறுப்புகள் உள்ளன. தேசத்தின் பெருமையை காப்பதில் மற்ற நாடுகளுடன் நம் நாடு வைத்துள்ள சர்வதேச ஒப்பந்தங்களில் சமரசம் செய்யக்கூடாது. நமது நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், நம்பிக்கையையும், உணர்வையும் பிரதிபலிக்க வேண்டும்.
சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளில் ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பு கூறுகிறது. இந்து சமய அறநிலையத்துறை தரப்போ சிலை கடத்தல் வழக்குகளை கையாளும்போது பொன் மாணிக்கவேல் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவில்லை என்றும், விதிகளை கடைபிடிக்க நினைக்கவில்லை என்றும் கூறுகிறது.
இந்த வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். இதில் உண்மை எது, போலி எது என்று தெரிய வேண்டும். இந்த விஷயத்தில் நியாமான விசாரணை தேவையாக உள்ளது. நாட்டின் சொத்துக்களான சிலைகள் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபரான சுபாஷ் சந்திர கபூரிடம் உள்ளன. அவை மீட்கப்பட வேண்டும்.
சிலை கடத்தல் தொடர்பான உண்மைகள் வெளிவரவேண்டும். அதற்கு சிபிஐ விசாரணைதான் சரியாக இருக்கும்.எனவே, உயர் நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படுகிறது. டிஐஜி அந்தஸ்துக்கும் குறையாத அதிகாரியை விசாரணை அதிகாரியாக சிபிஐ இயக்குநர் நியமிக்க வேண்டும்.
விசாரணையில் எந்த அதிகாரி மீது தவறு இருந்தாலும், குற்றம் கண்டுபிடிக்கப்பட்டாலும் உடனடியாக சிபிஐ நடவடிக்கை எடுத்து விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்