புதுக்கோட்டையை சேர்ந்தவர் 19 வயதான பூர்வஜா. இவர் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரின் மகள். இவர், தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி சிஏ படித்து வருகிறார். பூர்வஜா பகுதி நேர வேலையாக தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 19ம் தேதி இரவு பணிமுடிந்து விடுதிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர், பூர்வஜாவை வழிமறித்து அவர் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.


இதுகுறித்து பூர்வஜா பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை சிக்னலில் மின்னல் வேகத்தில் சென்ற பைக்கில் இருந்து ஒரு செல்போன் கீழே விழுந்தது. அப்போது, அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் அந்த செல்போனை எடுத்து வைத்திருந்தார். சிறிது நேரத்தில் பைக்கில் சென்ற 2 பேர் திரும்பி வந்து,போக்குவரத்து போலீஸ்காரரிடம் கீழே செல்போன் ஏதேனும் விழுந்ததா என்று கேட்டுள்ளனர்.


அப்போது காவலர், உங்கள் போன் மாடல் என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த காவலர் பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தார். அதில் மீஞ்சூரை சேர்ந்த பிரபல வழிப்பறி கொள்ளையன் 36 வயதான வசந்த் பிரியன் என தெரியவந்தது. மேலும் இவர், பூர்வஜாவிடம் செயின் பறித்ததும் தெரியவந்தது. உடன் வந்த கூட்டாளி மனோஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.


உடனே போலீசார் வழிப்பறி கொள்ளையன் வசந்த் பிரியனை கைது செய்தனர். அவர் மீது வண்ணாரப்பேட்டை, ராஜமங்கலம், வில்லிவாக்கம், கொளத்தூர், மீஞ்சூர் ஆகிய காவல் நிலையங்களில் 12 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட வசந்த் பிரியனிடம் நடத்திய விசாரணையில், தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அண்ணாநகர் தனிப்படைபோலீசார் வசந்த் பிரியன் மற்றும் அவரது காதலி மங்களதேவியை கைது செய்ததும் தெரியவந்தது.


வழிப்பறி கொள்ளைக்கு முன்பு வசந்த் பிரியன் பிரபல டாட்டூ கலைஞராக இருந்துள்ளார். இவர், வடபழனியில் தனியாக டாட்டூ கடை நடத்தி வந்துள்ளார். சினிமா நடிகர் மற்றும் நடிகைகளுக்கு டாட்டூ குத்தி வந்துள்ளார். கொரோனா காலத்தில் கடை மூடியதால் வருவாய் கிடைக்காமல் தனது காதலி மங்களதேவியுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார். பிறகு முழு வழிப்பறி கொள்ளையனாக மாறிய வசந்த் பிரியன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரபல கொள்ளையனாக தற்போது சென்னை முழுவதும் கைவரிசை காட்டி வந்ததும் தெரியவந்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண