இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கமானது மீண்டும் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்திலும் தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் கடலூரில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது இதுவரை கடந்த மூன்று மாதத்தில் 60,700 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் சுமார் 50,000 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சிகிச்சை பலனின்றி 525 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை தொற்று பாதித்த சுமார் 800க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட மிக முக்கியமானது தடுப்பூசி செலுத்தி கொள்வது என்பதால் மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வைப்பதில் அரசுகள் ஆர்வம்காட்டி வருகின்றன. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியத்தின் மூலமாக அடையாள அட்டை பெற்ற மூன்றாம் பாலினர்களில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் மூன்றாம் பாலினர் 100 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
அவர்களுக்கு தடுப்பூசி போடும் முன் உடல் உபாதைகள் ஏதும் உள்ளனவா அல்லது காய்ச்சல் சளி இருமல் ஏதேனும் உள்ளதா எனக் கேட்டறிந்த பின்னரே தடுப்பூசி போடப்பட்டது. இதில் கலந்துகொண்ட மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் தடுப்பூசி போட்ட பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் உடலில் காய்ச்சல், சளி, இருமல் போன்றவை ஏற்பட்டால் எடுத்துக்கொள்ள மாத்திரைகளும் வழங்கப்பட்டது. வேறு ஏதேனும் உடல் உபாதை ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இவ்வாறு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா பரவலை முழுவதுமாக ஒழித்துவிடலாம் எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
கடலூர் மாவட்டத்தில் 401 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். அவர்களில் 48 பேர் குடும்ப அட்டை வைத்துள்ளனர். மூன்றாம் பாலினர் நலவாரியம் மூலம் 280 பேர் அடையாள அட்டை பெற்றுள்ளனர். அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவர்கள் 121 பேர் உள்ளனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டமான மூன்றாம் பாலினர் நலன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியத்தின் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ள குடும்ப அட்டை பெறாத, வாரியத்தின் மூலம் அடையாள அட்டை பெற்றுள்ள மற்றும் அடையாள அட்டை பெறாத 353 மூன்றாம் பாலினர்களுக்கு முதற்கட்டமாக கோவிட்- 19 நிவாரண நிதியுதவி தலா ரூபாய் 2 ஆயிரம் விகிதம் ரூபாய் 7 லட்சத்து 6 ஆயிரம் மட்டும் ஒதுக்கப்பட்டு இதில் 238 மூன்றாம் பாலினர்கள் பயன் பெற்றுள்ளனர். மேலும் இரண்டாம் கட்டமாக கோவிட்-19 நிவாரண நிதியுதவி 347 மூன்றாம் பாலினர்களுக்கு தலா 2 ஆயிரம் வீதம் 6 இலட்சத்து 94ஆயிரம் ஒதுக்கப்பட்டதில் 190 மூன்றாம் பாலினர்கள் பயன் பெற்றுள்ளார்கள்.