செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக வைரஸ் தொற்று, செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாம் இடத்தில் இருந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற, கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னேற்பாடு குறித்து விவாதித்தார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன் பேசுகையில், தற்பொழுது தமிழகத்தில் வைரஸ் தொற்று சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய நகரங்களில் வேகமாக பரவி வருகிறது. அவை பரவாமல் தடுப்பதற்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதனடிப்படையில் செங்கல்பட்டில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வைரஸ் தொற்று வராமல் இருப்பதற்கு ஆய்வு கூட்டமானது நடைபெற்றது.
தடுப்பூசி தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியானது சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல் தவணை தடுப்பூசி 94% பேர் போட்டுள்ளனர் இரண்டாம் வணை தடுப்பூசி என்பது 88 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர். எங்கெங்கெல்லாம் தடுப்பூசி போடுவது போய் நிற்கிறதோ அங்கெல்லாம் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழக மக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை முறைப்படி செய்ய வேண்டும். பரிசோதனையையும் உயர்த்தி தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிப்பு கூடுதலாகும் பொழுது, கண்காணிப்பு மையங்களில் அவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 400 படுக்கைகள் ஆக்சிஜனுடன் தயார் நிலையில் உள்ளது. வட்டார மருத்துவமனைகளின் தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மீண்டும் கொரோனா கட்டுப்பாடு விதிக்கப்படும் என கேட்ட கேள்விக்கு, மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் 10% நபர்களுக்கு தொற்று ஏற்பட்டால், அல்லது பாதிக்கப்பட்ட பகுதியில் 40 சதவீதம் நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், வைரஸ் தொற்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென்பது விதி. இதுவரை தமிழ்நாட்டில் அது போன்ற நிலைமை ஏற்படவில்லை. தற்பொழுது 4 சதவீதத்துக்கு உள்ளாகவே பாதிப்பு இருக்கிறது. அதனால் இப்போது அதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் வைரஸ் தொற்று அதிகரிக்கும் பொழுது, கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்