சென்னை மடிப்பாக்கத்தில் இரண்டரை ஆண்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்படும் என அரசு தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்துள்ளது.

 

சென்னை மாநகராட்சியுடன் 2011ஆம் ஆண்டில் இணைக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த கோரி  அய்யம்பெருமாள் என்பவர்  வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ரூ.160 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கை கிடைத்தவுடன், நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விட்டு பணிகள் தொடங்கப்படும் என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2020ஆம் ஆண்டுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என 2019ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியத்தில் முந்தைய மற்றும் தற்போதைய அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். அதன்படி இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது வாரியத்தின் முன்னாள் செயலாளர்  ஹர்மந்தர் சிங், தற்போதைய செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, முன்னாள் நிர்வாக இயக்குனர்கள் டி.என்.ஹரிஹரன், சி.விஜயராஜ் குமார், தற்போதைய நிர்வாக இயக்குனர் கிர்லோஸ் குமார் ஆகியோர் ஆஜராகி, பாதாள சாக்கடை திட்டத்தை திட்டமிட்டபடி நிறைவேற்றாததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

 

அப்போது நீதிபதிகள், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமும், உங்களை வரவழைக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் விருப்பம் இல்லை என்றும், இந்த அவமதிப்பு வழக்கில் மீண்டும் ஆஜராக வேண்டிய சூழல் ஏற்படக்கூடாது என்றும், அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். மேலும், ஒரு திட்டத்தை உருவாக்கி, அதை குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் முடிக்கும் வகையில், திட்டம் குறித்து கீழ் நிலை அதிகாரிகளிடம் வாரம் ஒரு முறையாவது குறித்து ஆலோசனை செய்து, ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுரை கூறினர்.

 

அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியை தொடங்கி விட்டதாக கூறி, அதற்கான புகைப்படங்களை தாக்கல் செய்தார். இந்த பணி இரண்டரை ஆண்டுகளில் முடிக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தார். அரசு தரப்பு விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.