ஓட்டுநருக்கு பதில்  நடத்துனர்கள் பேருந்தை ஓட்டுவதாக எழுந்த புகாரை அடுத்து போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் பல வழித்தளங்களின் வசதிக்கு ஏற்ப இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை முழுவதும் 3,233 பெருநகர சென்னை போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் 602 வழிதடங்கள் வழியாக இயக்கப்பட்டு, 6,026 பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தப்படுகின்றன. தினமூம் மாநகர பேருந்துகளில் சுமார் 2 லட்சம் பேர் பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.


ஏராளமான பேருந்துகளில் முறையாக நியமிக்கப்பட்ட ஓட்டுநர்கள் மட்டுமே இயக்கி வருகின்றனர். 
இந்நிலையில் சமீப காலமாக சில வழித்தடங்களில் ஓட்டுநருக்கு பதிலாக நடத்துனர் பேருந்தை ஓட்டுவதாக புகார் எழுந்துள்ளது. 


போக்குவரத்து கழகம் எச்சரிக்கை


இதனை அடுத்து, மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, ”மாநகர போக்குவரத்துக் கழக கிளைகளில் ஒரு சில இடங்களில் நடத்துநர்கள் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்குவதாக தெரிய வருகிறது. மத்திய பணிமனையில் 28.01.2023 அன்று நடத்துநர், ஒட்டுநருக்கு பதிலாக பேருந்தினை எடுத்து டீஸல் பங்கினை இடித்து சேதமேற்படுத்தியுள்ளது இதனை உறுதி செய்கிறது.


எந்த சூழ்நிலையிலும் ஓட்டுநரை தவிர மற்றவர்கள் பேருந்தினை பணிமனை உள்ளே மற்றும் வெளியே கண்டிப்பாக இயக்க கூடாது. கிளைமேலாளர்கள் மற்றும் பணியிலுள்ள மேற்பார்வையாளர்கள் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படா வண்ணம் கண்காணிக்க வேண்டும்.


கிளைமேலாளர்கள் உரிய தகவலை ஓட்டுநர், நடத்துநர் மற்றும் அனைவரும் அறியும் வண்ணம் தகவல் பலகையில் ஒட்டவும், தொடர் முயற்சியாக பயிற்சி பள்ளிக்கு வரும் அனைவருக்கும் தெரியப்படுத்த இச்சுற்றறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை


இதுமட்டுமின்றி சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


அதன்படி, சென்னையில், அண்ணா சாலை உள்ளிட்ட 10 பிரதான சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும் என வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவித்திருந்தது. அதில் முதற்கட்டமாக 7 சாலைகளை அகலப்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள சி.எம்.டி.ஏ முடிவு செய்தது.  அடுத்த 20 ஆண்டுகால மாற்றங்களை முன்வைத்து விரிவாக்கம் செய்வதற்கான ஆய்வு பணிகள் துவங்கியுள்ளதாக சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.


தற்போது 60 அடியாக உள்ள சாலை அகலம் 100 அடியாக மாற்றப்பட உள்ளது. எத்திராஜ் சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, டேங்க் பண்ட் சாலை, கிரீம்ஸ் சாலை, நியூ ஆவடி சாலை, மற்றும் பெரம்பூர் கேரக்ஸ் சாலைகளும் அகலப்படுத்தப்படுகின்றன. 


இதேபோன்று, சென்னையில் இரண்டாவது கட்டமாக மாதவரம் - சிப்காட் சிறுசேரி வரை 45 கி.மீ., துாரத்திற்கான 'மெட்ரோ ரயில்' பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. இதற்கிடையே, மெட்ரோ ரயில் பணிக்காக, இரண்டு மேம்பாலங்களின் ஒரு பகுதியில் இடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.