செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கூவத்தூர் அடுத்த, கானத்தூர் கிராமத்தில், கடந்த மூன்று தலைமுறையாக மிகவும் பின் தங்கிய வகுப்பை சேர்ந்த நந்தகுமார் அவருடைய மனைவி சுலோச்சன, மகன் நிர்மல், மகள் என குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். நந்தகுமார் கூவத்தூரில் சலவை நிலையம் வைத்து நடத்தி வருகின்றார். இவரையும், இவர் குடும்பத்தை சார்ந்தவர்களையும், உங்களுடைய குலத்தொழிலை செய்யாமல் ஏன் வேறு இடத்தில் கடை வைத்து பிழைப்பு நடத்துகிறீர்கள், என கிராம மக்கள் அவரையும் அவர் குடும்பத்தினரையும் ஊரைவிட்டு ஒதுக்குவதாகவும், அவர்களை கோயில்களிலும், பொதுச் சாலைகளிலும், அனுமதிப்பதில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



 

அவருடைய சாதியை சொல்லி இழிவாகவும், இவரிடம் அடிக்கடி, அப்பகுதி மக்கள் சண்டையிட்டு வந்துள்ளனர். மேலும் 24-ம் தேதி இரவு பணி முடிந்து விட்டு வீடு திரும்பிய நந்தகுமார் தன்னுடைய குடும்பத்தினருடன் தன்னுடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது மர்ம நபர்கள் அவருடைய வீட்டிற்கு தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை தண்ணீர் கொண்டு அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் நடக்காமல் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதனைத் தொடர்ந்து நந்தகுமார் தன்னுடைய குடும்பத்தினருடன் கூவத்தூர் காவல்துறைக்கு சென்று புகார் மனு கொடுத்தார். கூவத்தூர் காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இந்த  பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

 

இந்த நிலையில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நேற்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேரடியாக சந்தித்து, புகார் மனுவை அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார். இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சி மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள கடிதத்தில், சம்பந்தப்பட்ட நபர்களின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.