தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.



 

பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதேபோல் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக, திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கூட்டணி இல்லாமல் தனித்து களம் காணும் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக,  நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம்  ஆகிய கட்சிகளும் வேட்பாளரை நிறுத்தி உள்ளன. இந்நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தனித்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.



 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் ,விடுதலை சிறுத்தை கட்சி, மதிமுக ஆகியவற்றுக்கு தலா ஒரு மாவட்ட வார்டு உறுப்பினர்களை ஒதுக்கியுள்ளது. ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்களும், விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா ஒரு இடங்களை ஒதுக்கியுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கி உள்ளது. ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் கட்சிக்கு ஆறு இடமும், மதிமுகவிற்கு 4 இடமும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 7 இடமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் கூட திமுக சார்பில் ஒதுக்கப்படவில்லை. 



 

மறைமலைநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சி செங்கை ஒருங்கிணைந்த மாவட்ட அவசரக்குழுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வாக்கு மிக்க இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் திருப்போரூர் ஒன்றிய அளவில்  தண்டலம், ஆலத்தூர், பையனூர், தண்டரை, மானாமதி, ஆலத்தூர் ஐந்து ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், திருக்கழுகுன்ற ஒன்றிய அளவில் நெய்குப்பி, ஆயப்பாக்கம் ஆகிய ஒன்றிய கவுன்சிலர்  பதவிக்கும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜபாத் ஒன்றியத்தில் ஏகானாம்பேட்டை, ஐயம்பேட்டை ஆகிய ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.



 

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்கள் கூறுகையில், உள்ளாட்சி மன்ற தேர்தலில் எங்கள் கட்சிக்கு  முறையாக  திமுக கூட்டணியில் இடம் ஒதுக்கப்படாததே நாங்கள் தனித்து போட்டியிட காரணம் என தெரிவித்தனர்கள். இதில் சில இடங்களில் தாங்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் தொடர்பு கொண்டு பேசுகையில், மாநில அளவில் நாங்கள் கூட்டணியில் உள்ளோம். மாவட்ட அளவில் கூட்டணி பேச்சுவார்த்தை சென்றுகொண்டிருக்கிறது. வேட்புமனு தாக்கல் மட்டுமே முடிவடைந்துள்ளது. வாபஸ் பெறுவதற்கு நேரம் உள்ளது என தெரிவித்தார்