Telegram App மூலம் தொடர்பு !! அரசு பணி ஆசை காட்டி , மிரட்டி இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர், சென்னையில் சுமார் 4 மாதங்களாக தங்கி அரசு பணி (UPSC) தேர்வுக்காக படித்து வருவதாகவும், அப்பொழுது டெலிகிராம் செல்போன் செயலி மூலம் வீடு வாடகைக்கு தேடி வந்துள்ளார்.
டெலிகிராம் செல்போன் செயலியிலிருந்து பேசிய ஒரு நபர் தனது பெயர் ஹரிஷ்குமார் என்றும், வீடு வாடகைக்கு தேடுகிறீர்களா என கேட்டு, தானும் UPSC தேர்வுக்காக 3 வருடங்களாக படித்து வருவதாகவும் நேர்முக தேர்வு வரை சென்றுள்ளதாகவும் , உங்களுக்கும் அரசு பணி தேர்வுக்கு உதவுவதாக கூறி பேசி வந்துள்ளார்.
பின்னர் ஒரு நாள் , பெண்ணின் புகைப்படத்தை அனுப்ப சொல்லி கூறியுள்ளார். அனுப்பவில்லை என்றால் உனது பெற்றோருக்கு தெரிவிப்பதாக கூறி மிரட்டி உள்ளார். இதனால் அப்பெண் அவரது புகைப்படத்தை அனுப்பியதாகவும், பின்னர் சில நாட்கள் கழித்து என்னுடன் வெளியே வர வேண்டும் என மிரட்டியுள்ளார்.
10.12.2025 அன்று ஆட்டோவில் அழைத்துச் சென்று ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து மிரட்டி தன்னுடன் உறவு வைத்து கொள்ள வேண்டும் வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னை அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்த யோகேஷ்குமார் ( வயது 23 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் , யோகேஷ்குமார் மீது ஏற்கனவே தேனி மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் ஒரு வழக்கு உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட யோகேஷ்குமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
வேலை பார்த்த வீட்டில் நகையை திருடிய பெண்மணி கைது.
சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் குடும்பத்துடன் வசித்து வரும் அஜய் அய்யப்பன் ( வயது 40 ) என்பவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார் இவரது 2 குழந்தைகளை பார்த்துக் கொள்ள தனியார் ஏஜென்சி நிறுவனம் மூலம் செண்பகம் ( வயது 43 ) என்பவர் சுமார் 1 வருடமாக வீட்டில் வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த 26.11.2025 அன்று அஜய் அய்யப்பன் வீட்டின் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை சரிபார்த்த போது, குழந்தையின் தங்கச் சங்கிலி மற்றும் மனைவியின் தங்கச் சங்கிலிகள் என சுமார் 41.5 கிராம் எடை கொண்ட 3 தங்கச் சங்கிலிகள் காணவில்லை எனவும், மேற்படி வேலைக்கார பெண் செண்பகம் மீது சந்தேகம் உள்ளதாகவும் அஜய் அய்யப்பன் தேனாம்பேட்டை காவல் நிலைய குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் , போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தேனாம்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்ததில், மேற்படி வேலைக்கார பெண்மணி செண்பகம் புகார் தாரர் வீட்டில் சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடிச் சென்று அடகு வைத்துள்ளதும் தெரிய வந்தது.
அதன் பேரில், காவல் குழுவினர் திருட்டில் ஈடுபட்ட செண்பகம் ( வயது 43 ) என்பவரை கடந்த 11.12.2025 அன்று கைது செய்தனர். அவரிடமிருந்து 41.5 கிராம் எடை கொண்ட 3 தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட செண்பகம் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.