செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் பிரசித்தி பெற்ற ஸ்தலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் தமிழக அரசின் அன்னதானத் திட்டத்தின்கீழ் நாள்தோறும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயில் அன்னதானத்தைச் சாப்பிடச்சென்ற தன்னை, முதல் பந்தியில் அமரக் கூடாது என்று கூறி கோயிலில் சிலர் தடுத்து, திருப்பி அனுப்பியதாக நரிக்குறவப் பெண் ஒருவர் குற்றச்சாட்டுத் தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நரிக்குறவ பெண்ணிற்கு அன்னதானம் வழங்காமல், விரட்டியதாக சர்ச்சை ஏற்பட்டது. பெண்ணின் குமுறல், சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கடந்த 29 இல், அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, குமுறல் பெண் உள்ளிட்ட நரிக்குறவர்களுடன் அன்னதானம் சாப்பிட்டார். மாமல்லபுரம் - பூஞ்சேரி, நரிக்குறவர் வசிப்பிட பகுதியில், கூடுதல் வீடுகள், அடிப்படை வசதிகள் கோரி, அவரிடம் நரிக்குறவர் முறையிட்டனர்.
இச்சூழலில், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், கோட்டாட்சியர் சாகிதா பர்வீன், மகளிர் திட்ட அலுவலர் ஸ்ரீதர், தாசில்தார் சிவசங்கரன் உள்ளிட்டோருடன், நரிக்குறவர் பகுதியில், நேற்று ஆய்வு செய்தார். நரிக்குறவர், தங்கள் பகுதி குறைகளை தெரிவித்தனர். மேலும், 48 குடும்பங்களுக்கு வீடுகள் அமைந்து, 20 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லாதது, தற்போதைய வீடுகளுக்கும் மனை பட்டா, மின் இணைப்பு வழங்காதது, இரண்டு தெருக்களில், கான்கிரீட் சாலை அமைக்காதது, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட குறைகளை, அவர்களிடம் கேட்டறிந்தார்.குமுறல் வீட்டு பெண்ணின் வீட்டிற்குள் ஆய்வு செய்தார். பழைய வீடுகளும் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
அவர்களின் குடும்பங்கள் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்து, பட்டா வழங்கவும், கூடுதல் வீடுகள் கட்டவும், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றவும், அறிக்கை அளிக்க, வருவாய், பேரூராட்சி துறையினரிடம் அறிவுறுத்தினார்.அவர்கள் வாழ்வாதார தொழிலுக்காக, மகளிர் சுயஉதவி குழுக்கள் ஏற்படுத்தி, கடன், வேலைவாய்ப்பு அளிக்கவும் அறிவுறுத்தினார்.பஸ் நிலையத்திற்காக, நிலம் இழந்து, அரசு மருத்துவமனை பகுதியில் மாற்று இடம் பெற்றவர்கள், தங்களை மீண்டும் வேறு இடத்திற்கு மாற்றும், தற்போதைய நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, அவரிடம் முறையிட்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.