தமிழ்நாடு துணை முதலமைச்சர் 2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை கடந்த 10.09.2024 சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார். இந்த போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் 10.09.2024 முதல் 24.09.2024 வரை நடைபெற்றன.
முதலமைச்சர் கோப்பை போட்டி
12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் 17 வயது முதல் 25 வயது வரை உள்ள கல்லூரி மாணவ, மாணவியர்கள் 15 வயது முதல் 35 வயது வரை பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என 5 வகை பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 11,56,566 நபர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் வெற்றி பெற்றுள்ள 33,000 நபர்கள் முதலமைச்சர் கோப்பை-2024 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
தொடக்க விழா
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சென்னை, கோயம்பத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடத்தப்படுகின்றன. மொத்தம் 35 வகையான விளையாட்டுக்கள் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார். 2024 பாரிஸ் பாராலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன், மற்றும் மும்முறை தாண்டுதல் வீரர் பிரவீன் சித்ரவேல் ஆகியோர் தொடக்க விழாவில் ஜோதியை ஏந்திச் சென்றார்கள்.
முதல் கையெழுத்து..
இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது: முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2024 உடைய மாநில அளவிலான போட்டிகளை இன்று உங்களுடைய முன்னிலையில் தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமை அடைகின்றேன். துணை முதலமைச்சர் ஆன பிறகு அந்த பொறுப்பை ஏற்ற பிறகு நான் கையெழுத்திட்ட முதல் கோப்பு இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கானதுதான். இதற்கான நிதியை ரூ.82 கோடியாக உயர்த்துவதற்கான கோப்பில் தான் முதலில் கையெழுத்திட்டேன் என்பதை இங்கே பெருமையோடு நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்த சிறப்புக்குரிய நிகழ்வுக்கு இரண்டு முக்கியமான வீரர்கள் வந்திருக்கிறார்கள். மாற்றுத் திறன் பேட்மிண்டன் வீராங்கனையான தங்கை துளசி முருகேசன் அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் நம்முடைய தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடித்தந்தவர்தான் தங்கை துளசிமதி முருகேசன் . உலக பாரா சாம்பியன்ஷிப் 2024ல் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்தார். ஆசிய பாரா விளையாட்டு 2023 போட்டியில் தங்கப்பதக்கம், இரட்டையர் பிரிவில் வெள்ளி, கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர்தான் அருமை தங்கை துளசிமதி முருகேசன்.
சிறந்து விளங்குகின்ற மாநிலம்
விளையாட்டில் சாதிப்பதற்கு தடை எதுவும் இல்லை என்று பதக்கங்களை குவித்து வரும் தங்கை துளசிமதி முருகேசனுக்கு பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளி வென்றதற்காக நம்முடைய அரசு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ரூ.2 கோடி உயரிய ஊக்கத்தொகையாக வழங்கி பெருமைப்படுத்தினார்கள். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு சிறப்பு இருக்கும். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு மாநிலம் சிறந்து விளங்கும். ஆனால் இந்தியாவிலேயே அத்தனை துறைகளிலும் சிறந்து விளங்குகின்ற மாநிலம் எதுவென்றால் அது நம்முடைய தமிழ்நாடு தான். குறிப்பாக தமிழ்நாடு விளையாட்டு துறை செய்கின்ற அந்த சாதனைகள் மகத்தானவை. அதற்கு ஒரு சின்ன உதாரணம் தான் இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்.
உங்களுடைய கோரிக்கைகளை ஏற்று இந்த வருடம் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கைப்பந்து, கேரம், செஸ், வாள்வீச்சு, ஜூடோ, குத்துச்சண்டை கோ-கோ, டிராக், சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ் போன்ற புதிய விளையாட்டுகளையும், இந்தாண்டு சேர்த்து இருக்கிறோம்.