திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் காந்தி கிராம பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.


இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்திய ஒன்றியத்தின மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களே என உரையை துவங்கினார்.


காந்தி- தமிழ்நாடு 


பின்னர் விழாவில் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,


குஜராத்தில் பிறந்து, ஒற்றுமையும் சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி இந்திய தேசத்தின் தந்தையாக வலம் வந்த அண்ணல் காந்தியடிகளுக்கும், தமிழ்நாட்டுக்குமான தொடர்பு மிக மிக அதிகம்.


தனது வாழ்நாளில் 26 முறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்த காந்தி, தமிழை விரும்பி கற்றவர், தமிழ் மொழியில் கையெழுத்திட்டவர்.


திருக்குறளை கற்பதற்காகவே, தமிழ் மொழியை கற்க வேண்டும் என்று கூறியவர். இவையனைத்துக்கும் மேலாக அரையாடை கட்ட வைத்தது தமிழ் மண்.


வட இந்தியர் அனைவரும் தென்னிந்திய மொழி ஒன்றை கற்க வேண்டும், அது தமிழாக இருக்க வேண்டும் என கூறியவர் காந்தி.


இந்தியா கிராமங்களில் வாழ்கிறது, கிராமங்கள் உயர நாடு உயரும் என்ற கொள்கை அடிப்படையில், காந்தியின் சீடர்களான டாக்டர் ஜி. ராமச்சநிதிரன், அவரது துணைவியார் சௌந்தரம் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்த பயிற்சி நிறுவனம், இன்று பல்கலைக்கழகமாக சிறந்து விளங்குகிறது.


இதற்கு ஏதுவாக, 207 ஏக்கர் நிலத்தினை கல்வி கொடையாக வழங்கிய சின்னாலபட்டியைச் சேர்ந்த் புரவலர்களை நன்றியோடு நினைவு கூர்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.



”உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு”


மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டு மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகிறது. இவை பல்வேறு துறைகளில் திறம்பட செயலபட்டு வருகிறது.


இந்தியாவிலேயே, உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதனை மேலும் வலுபடுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


பெண் கல்வையை ஊக்குவிக்க புதுமை பெண் திட்டம், உயர்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு, ஐஐடி உள்ளிட்ட நிறுவனங்களில் பயில நிதி உதவி, இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன் உள்ளிட்ட கல்வி சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.





ஆங்கிலத்தில் பிரதமரிடம் கோரிக்கை:


தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஆங்கிலத்தில் உரையாற்ற ஆரம்பித்தார். அவர் ஆங்கிலத்தில் பேசியதாவது, கல்வி ஒன்றுதான் எந்தொவொரு சூழ்நிலையிலும் யாராலும் அழிக்க முடியாத சொத்து. அதை வழங்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. அதற்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும். எனவே கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.






சமூகத்திற்கு சேவை செய்வதே கல்வியின் ஒட்டுமொத்த இலக்கு என்ற காந்தியின் கூற்றுக்கு ஏற்ப, முற்போக்கு சிந்தனையுடன் அறிவியல் சார்ந்த சமூகமாக தமிழ் சமூகத்தை கட்டமைக்க இளைஞர்களை கேட்டு கொள்கிறேன் என்றும் காந்தியின் நெறிகளை கடைபிடிப்பதன் மூலம், காந்தியின் பெயரை சொல்ல நம்மை தகுதி படுத்தி கொள்வோம் என்றும் தெரிவித்தார்.





மேலும் இவ்விழாவில் டாக்டர் பெற்ற இசைஞானி இளையராஜா, மிருதங்க வித்துவான் உமையாள்புரம் சிவராமன் மற்றும் பட்டம் பெற்ற மாணவர்களையும் வாழ்த்துகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.